

மும்பை,
மராட்டிய அரசியலில் கடந்த 2023-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவு பெரும் புயலை கிளப்பியது. ஆளும் பா.ஜனதா கூட்டணியில் இணையும் அஜித்பவாரின் முடிவால் கட்சி உடைந்தது. தனது ஆதரவாளர்களுடன் ஆளும் பா.ஜனதா கூட்டணிக்கு தாவிய அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும் ஆனார். கட்சி பெயர் மற்றும் சின்னத்தையும் தனதாக்கிக்கொண்டார்.
சரத்பவார் அணி தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி) என்ற பெயருடன் தனித்து செயல்பட்டு வருகிறது. இதனால் பவார் குடும்பத்திலும், கட்சியிலும் ஒரு பெரிய இடைவெளி உருவானது. மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் இரு அணிகளும் எதிரும், புதிருமாக போட்டியிட்டன. ஆனால் சமீபகாலமாக அஜித்பவார் இரு அணிகளையும் மீண்டும் இணைப்பதில் ஆர்வம் காட்டி வந்ததாக தகவல்கள் கூறுகின்றன. தனது முடிவால் உடைந்த கட்சியை மீண்டும் இணைப்பது அவரது ஆசையாக இருந்தது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சி புனே மற்றும் பிம்பிரி சின்ச்வாட் மாநகராட்சி தேர்தலில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. அதேபோல மாவட்ட பஞ்சாயத்து தேர்தலிலும் இரு அணிகளும் ஒன்றிணைந்து களம் காண்கின்றன. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் துணை முதல்-மந்திரி அஜித்பவாரின் மரணம் அனைத்தையும் புரட்டிப்போட்டுள்ளது.
கட்சிகளை இணைக்க மீண்டும் பாலமாக இருந்த அவரின் மறைவு இதற்கான பேச்சுவார்த்தை மற்றும் நடவடிக்கைகளில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் கட்சி இணைவது குறித்து இரு அணிகளுக்கு இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. அஜித்பவாரின் அடுத்த அரசியல் வாரிசாக சுனேத்ரா பவாரை கொண்டுவரும் வேலையில் முணைப்பு காட்டிய தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள், கட்சி இணைப்பு குறித்த கேள்விகளை தட்டிக்கழிக்கவே பார்க்கின்றனர்.
இதற்கிடையில், கடந்த மாதம் 17-ந்தேதி சரத்பவாரும், அஜித்பவாரும் ஒன்றாக சந்தித்து தேநீர் அருந்தும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டும் இன்றி வருகிற 12-ந்தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளும் அதிகாரப்பூர்வமாக இணைவதை அறிவிக்க அஜித்பவார் திட்டமிட்டிருந்ததாக சரத்பவார் தரப்பு தற்போது வெளிப்படையாக தெரிவித்துள்ளது.
இதுபற்றி தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) கட்சியின் மூத்த தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், “அஜித்பவார் பலமுறை எனது இல்லத்திற்கு வந்து இரவு உணவின்போது கட்சி இணைப்பு குறித்து பேசினார். கடந்த கால கசப்புகளை மறந்து மீண்டும் ஒன்றாக வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்” எனத்தெரிவித்தார்.
அதேநேரம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுனில் தட்கரே கூறுகையில், “அந்த வீடியோ வெறும் சாதாரண தேநீர் விருந்துதான்” என்று கூறி தட்டிக்கழித்துள்ளார். இதன்மூலம் அஜித்பவார் முன்னெடுத்த கட்சி இணைப்பு முயற்சிக்கு தற்போது பெரும் முட்டுக்கட்டை விழுந்து இருப்பதாக தெரிகிறது. சுனேத்ரா பவார் துணை முதல்-மந்திரி பதவி ஏற்றது, அவர்களது கட்சியின் முடிவாகத்தான் இருக்கவேண்டும் என்றும், இந்த விவகாரம் தனக்கு தெரியாது என்றும் சரத்பவார் தனது கருத்தை வெளிப்படுத்தினார். எனவே தேசியவாத காங்கிரஸ் இரு அணிகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.