

புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் வாட்டி வருகிறது. மாநிலம் முழுவதும் வரலாறு காணாத பனிப்பொழிவு காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 118 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மிக மோசமான வானிலை காணப்படுகிறது.
நேற்று காலை நிலவரப்படி டெல்லி நகரின் சப்தர்ஜங் பகுதியில் 2.4 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையே நிலவியது. கடந்த 1901-ம் ஆண்டு 2.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆயாநகர் மற்றும் லோதிரோடு பகுதியில் 2 டிகிரி செல்சியசுக்கு குறைவான வெப்பநிலையே இருந்தது.
டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதை தெரியாத அளவுக்கு பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால் அங்கு வந்த 4 விமானங்கள் மற்ற பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.
மோசமான வானிலை காரணமாக ஹவுரா-டெல்லி பூர்வா எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட 24 ரெயில்கள் சுமார் 2 முதல் 5 மணி நேரம் வரை தாமதமாக வந்தன. சாலைகளை மூடி மறைத்தபடி பனிபொழிந்து வருவதால் வாகனங்கள் ஊர்ந்தபடியே செல்கின்றன.
இந்த கடும் குளிர் அடுத்த 4 நாட்களுக்கு நீடிக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புத்தாண்டுக்கு பிறகு பனிப்பொழிவு படிப்படியாக குறையும் என தெரிகிறது.
மலைப்பகுதியான இமாசலபிரதேச மாநிலத்தில் கடும் குளிர் வாட்டி வருகிறது. அங்குள்ள மணாலி, சோலான், குப்ரீ உள்ளிட்ட பல பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 1 மற்றும் 2 டிகிரி செல்சியசுக்கும் கீழே சென்றது. கெய்லாங் பகுதியில் மைனஸ் 11.5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையே நிலவியது. கடும் குளிரால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.
காஷ்மீர் மாநிலத்தில் கொட்டி தீர்க்கும் பனிப்பொழிவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீநகர், லடாக் உள்ளிட்ட பல பகுதிகளில் மைனஸ் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே நிலவுகிறது. ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற தால் ஏரி உறைந்த நிலையில் உள்ளதால் அங்கு இருந்து குடிநீர் வினியோகிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் எங்கும் பனி படர்ந்து காணப்படுகிறது.
உத்தரபிரதேச மாநிலத்திலும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. பல இடங்களில் நண்பகல் வேளைகளிலும் மைனஸ் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே உள்ளது.
ஜான்பூர் மாவட்டம் ஜருனாவில் கடும் குளிர் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒருவரும், பரியார்பூர் சிராலி பகுதியில் குளிரை தாக்கு பிடிக்க முடியாமல் நெஞ்சு வலி காரணமாக ஒருவரும் என 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அரியானா மாநிலத்தில் சாலைகள் தெரியாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு இருந்தது. ரெவாரி மாவட்டத்தில் மோசமான வானிலை காரணமாக வாகனங்கள் விபத்தில் சிக்கியதால் 2 பேர் பலியாகினர். 12 பேர் காயம் அடைந்தனர்.
ஓடிசா மற்றும் ராஜஸ்தான் மாநிலத்திலும் பனிப்பொழிவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் 5 முதல் 7 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையே நிலவியது. கடும் குளிர் காரணமாக பலர் சாலைகளில் வெப்பம் மூட்டி குளிர் காய்ந்தனர். குஜராத் மாநிலத்திலும் பல இடங்களில் 3 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையே காணப்பட்டது.
வடமாநிலங்களின் பல பகுதிகளில் சில நாட்களுக்கு இந்த பனிப்பொழிவு நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.