இந்தியாவின் 16 மாநிலங்களில் உள்ள நிலத்தடி நீரில் கடுமையான யுரேனியக் கலப்பு - விஞ்ஞானிகள் தகவல்

இந்தியாவின் 16 மாநிலங்களில் உள்ள நிலத்தடி நீரில் கடுமையான யுரேனியக் கலப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்தியாவின் 16 மாநிலங்களில் உள்ள நிலத்தடி நீரில் கடுமையான யுரேனியக் கலப்பு - விஞ்ஞானிகள் தகவல்
Published on

புதுடெல்லி

அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தங்கள் ஆய்வின் அடிப்படையில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர். அவர்கள் ஆய்வு தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்தியாவில் குடிநீருக்கும், பாசனத்துக்கும் ஆதாரமாக இருக்கும் நிலத்தடி நீரில் யுரேனியத்தின் அளவு பரவலாக அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் 16 மாநிலங்களில் இருக்கும் நிலத்தடி நீரில் உள்ள யுரேனியத்தின் அளவு குறித்த தகவல்கள் தொகுக்கப்பட்டன. அதில் ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் 324 கிணறுகளில் உள்ள நீரில் யுரேனியத்தின் அளவு அதிகமாக உள்ளது. இது குடிநீரில் யுரேனியத்தின் அளவாக உலக சுகாதார அமைப்பால் இந்தியாவுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட அளவை விட அதிகமாக உள்ளது. இந்தியாவில் ஒரு லிட்டர் குடிநீரில் 30 மைக்ரோகிராம்களுக்கு மிகாமல் யுரேனியம் இருந்தால் அது பாதுகாப்பான குடிநீர் என உலக சுகாதார அமைப்பு வரையறுத்துள்ளது.

முந்தைய நீர்த்தர ஆய்வுத் தகவல்களை ஆய்வு செய்ததில், இந்தியாவின் வடமேற்கில் உள்ள 26 மாவட்டங்கள் மற்றும் தெற்கு, தென்கிழக்கு இந்தியாவில் 9 மாவட்டங்களில் நிலத்தடி நீர்ப்படுகையில் யுரேனியத்தின் கலப்பு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் குடிநீரில் இருக்கும் கலப்புகள் குறித்த இந்திய தர அமைப்பின் பட்டியலில், யுரேனியத்தின் கலப்பு குறித்த தகவல்கள் சேர்க்கப்படவில்லை. நிலத்தடி நீரில் இயல்பாகவே இருக்கும் யுரேனியத்தின் அளவானது, நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படுதல், நைட்ரேட் மாசு, நிலத்தடி நீர் படிந்திருக்கும் பாறைகளில் இருக்கும் யுரேனியத்தின் அளவு, நிலத்தடி நீரில் இருக்கும் இதர வேதியியல் கூறுகளுடன் யுரேனியம் வினைபுரிவது ஆகிய காரணங்களால் அபாயகரமான அளவுக்கு உயர்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

குடிநீரில் யுரேனியத்தின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில் நாள்பட்ட சிறுநீரக நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் தற்போது இருக்கும் நீர்த்தர கண்காணிப்பு திட்டத்தை இந்தியா மறுசீரமைப்பு செய்ய வேண்டியுள்ளது. யுரேனியக் கலப்பு அதிகரிப்பதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுத் தகவலானது என்விரோன்மென்டல் சயின்ஸ் டெக்னாலஜி லெட்டர்ஸ் என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com