பா.ஜனதா எம்.எல்.ஏ. மகன் என்னை பலாத்காரம் செய்தது உண்மை - இளம்பெண் பேட்டியால் பரபரப்பு


பா.ஜனதா எம்.எல்.ஏ. மகன் என்னை பலாத்காரம் செய்தது உண்மை - இளம்பெண் பேட்டியால் பரபரப்பு
x

எம்.எல்.ஏ.வின் மகன் திருமண ஆசை காட்டி தன்னை பலாத்காரம் செய்ததாக இளம்பெண் தெரிவித்துள்ளார்.

பீதர்,

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் அவுராத் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பிரபு சவான். முன்னாள் மந்திரியான இவரது மகன் பிரதீக் சவான். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பிரதீக் சவானுக்கும், மராட்டியத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

இதையடுத்து பிரதீக் சவான் மற்றும் பெண் பல்வேறு இடங்களில் ஜோடியாக சுற்றி வந்தனர். அப்போது பிரதீக் சவான் திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது பிரதீக் சவான் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் மகளிர் ஆணையத்தின் மூலம் அவுராத் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் பிரதீக் சவான் மீது அவுராத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட மராட்டிய இளம்பெண் நேற்று பீதரில் செய்தியாளர்களுக்கு பரபரப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "பா.ஜனதா எம்.எல்.ஏ. பிரபு சவான் என் மீது கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது. எனக்கு எந்த நபருடனும் தொடர்பு இல்லை. பிரதீக் சவானுக்கும் எனக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து பெற்றோர் முன்னிலையில் 2 பேருக்கும் திருமணம் பேசி நிச்சயம் செய்யப்பட்டது. திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையுடன் அவருடன் சுற்றினேன். அப்போது அவர் என்னை பெங்களூரு உள்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்தார். இது உண்மை. நான் பொய்கூறவில்லை. தற்போது அவர் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து நியாயம் கேட்டபோது பிரபு சவான் என் மீது தாக்குதல் நடத்தினார்.

பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் முன்னிலையில் திருமணம் செய்து வைப்பதாக கூறியதால்தான் நான் பிரதீக் சவானுடன் நெருங்கி பழகினேன். ஆனால் தற்போது அவர் என்னை ஏமாற்றிவிட்டார். எனவே போலீசார் பிரதீக் சவான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

1 More update

Next Story