

புதுடெல்லி,
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பா.ஜ.க. எம்.பியான பிரிஜ் பூஷன் சரண் சிங் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வினேஷ் போகத் உள்ளிட்ட வீரர்-வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் பிரிஜ் பூஷண் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
டெல்லி காவல்துறை வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கையைப் (FIR) பதிவு செய்து, பின்னர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருந்தது. தொடர்ந்து இந்த வழக்கு டெல்லி கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இருந்து பிரிஜ் பூஷணை விடுவித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
போதிய ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளின் முரண்பாடுகள் காரணமாக பிரிஜ் பூஷன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவர் விடுதலை செய்யப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர். அவருடன் மல்யுத்தக் கூட்டமைப்பின் முன்னாள் உதவிச் செயலாளர் வினோத் தோமர் என்பவரும் விடுவிக்கப்பட்டுள்ளார்.