விநாயகர் சிலை ஊர்வலத்தில் 30 பெண்களுக்கு பாலியல் தொல்லை... பரபரப்பு சம்பவம்

3 ஊர்வலத்தினரும் டி.ஜே. இசையை ஒலிக்கச் செய்து ஆடிப்பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டபடி வந்தனர்.
விநாயகர் சிலை ஊர்வலத்தில் 30 பெண்களுக்கு பாலியல் தொல்லை... பரபரப்பு சம்பவம்
Published on

பெங்களூரு,

விநாயகர் சிலை ஊர்வலம்

கர்நாடக மாநிலத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வருகிறார்கள். ஊர்வலமும் நடத்தி வருகிறார்கள்.

அதுபோல் நேற்று முன்தினம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் பல்வேறு இந்து அமைப்பினர் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தினர். அதில் மராட்டிய மக்கள் அதிகம் வாழும் மராட்டா பகுதியில் இருந்து ஒரு விநாயகர் சிலையும், மேதார் ஓணி மற்றும் கலால் ஓணி பகுதிகளில் இருந்தும் 2 விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.

பாலியல் தொல்லை

3 விநாயகர் சிலை ஊர்வலமும் ஒரே நேரத்தில் அதாவது இரவு 9.30 மணியளவில் சி.பி.டி. சாலையை வந்தடைந்தன. இதனால் அந்த சாலையில் கூட்டம் அலைமோதியது. ஆயிரக் கணக்கானோர் அந்த சாலையில் திரண்டிருந்தனர். 3 ஊர்வலத்தினரும் டி.ஜே. இசையை ஒலிக்கச் செய்து ஆடிப்பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டபடி வந்தனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்த நிலையில் கலால் ஓணி பகுதியில் இருந்து வந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்றிருந்த பெண்களுக்கு சிலர் பாலியல் தொல்லை கொடுத்தனர். இதனால் அந்த பெண்கள் சத்தம்போட்டு கூச்சலிட்டனர்.

போலீஸ் தடியடி

இதையடுத்து கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை இன்னொரு தரப்பினர் தாக்க தொடங்கினர். இதனால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பெரும் பதற்றமும் உண்டானது. வன்முறை ஏற்படும் சூழலும் உருவானது. இதையடுத்து போலீசார் கூட்டத்தை கட் டுப்படுத்த முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து போலீசார் கூட்டத்தினர் மீது தடியடி நடத்தினர். இதனால் அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அதையடுத்து போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதையடுத்து கூட்டத்தினரை அங்கிருந்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுதொடர்பாக உப்பள்ளி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இது தொடர்பாக உப்பள்ளி-தார்வார் போலீஸ் கமிஷனர் பூஷண் போரசே நிருபர்களிடம் கூறுகையில், 'ஒரே நேரத்தில் சி.பி.டி. சாலைக்கு 3 பகுதிகளில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலம் வந்ததால் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இதை பயன்படுத்தி சிலர் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இதுவரை 30 பெண்கள் தங்களுக்கு மர்மநபர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவித்து இருக்கிறார்கள். இதனால் ஏற்பட்ட களேபரத்தில் தடியடி நடத்தினோம். பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறோம். இதுதொடர்பாக கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம்' என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com