

புதுடெல்லி,
பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்த நிதிஷ் குமார் அண்மையில், அந்த கூட்டணியை முறித்துக்கொண்டு, பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். பீகாரில் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததை தொடர்ந்து, மத்தியிலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு நிதிஷ் குமாருக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.
அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். அமித்ஷா கூறியிருப்பதாவது:- நான் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமாரை சந்தித்தேன். எனது இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, நிதிஷ் குமாரை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வருமாறு அழைப்பு விடுத்துள்ளேன் என்றார்.
வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் போது, தேசிய ஜனநாய கூட்டணியில் இணையும் முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.