

புதுடெல்லி,
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் உள்ள ஷாகீன் பாக் பகுதியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், டெல்லி சட்ட மன்ற தேர்தலுக்கு பிறகு ஷாகின் பாக் பகுதியில் போராட்டக்காரர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படலாம் என்று சந்தேகத்தை ஓவைசி வெளிப்படுத்தியிருந்தார்.
ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த ஐதராபாத் எம்.பி ஓவைசியிடம் இது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது ஓவைசி கூறியதாவது ; போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படலாம். ஷாகீன் பாக் இடமானது ஜாலியன்வாலாபாக் போன்று மாறலாம். இது நடக்கக்கூடும். துப்பாக்கியால் சுட வேண்டும் என பாஜக மந்திரி கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் தீவிரமாக்குவது யார் என்பதற்கு அரசாங்கம் பதில் அளிக்க வேண்டும் என்றார்.