பயங்கரவாதி ஷாரிக் உள்பட 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

சிவமொக்கா மாவட்ட ஆற்றுப்பகுதிகளில் வெடிகுண்டு சோதனை நடத்தி பயிற்சி பெற்ற வழக்கில் பயங்கரவாதி ஷாரிக் உள்பட 3 பேர் மீது சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
பயங்கரவாதி ஷாரிக் உள்பட 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
Published on

பெங்களூரு:

சிவமொக்கா மாவட்ட ஆற்றுப்பகுதிகளில் வெடிகுண்டு சோதனை நடத்தி பயிற்சி பெற்ற வழக்கில் பயங்கரவாதி ஷாரிக் உள்பட 3 பேர் மீது சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

வெடிகுண்டு சோதனை

சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள துங்கா ஆற்றுப்பகுதியில் குண்டு வெடிப்பு சோதனை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் மாஸ் முனிர் மற்றும் யாசின் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அதில் தொடர்புடைய முகமது ஷாரிக் தப்பி ஓடி தலைமறைவானார். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கடந்த ஆண்டு(2022) மங்களூருவில் நடந்த குக்கர் வெடிகுண்டு சம்பவத்தில் பயங்கரவாதி ஷாரிக் படுகாயம் அடைந்தார். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக பெங்களூருவுக்கு அழைத்து வரப்பட்ட ஷாரிக், குணமடைந்த பின்னர், என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

குற்றப்பத்திரிகை தாக்கல்

பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஷாரிக், மாஸ் முனிர், யாசின் ஆகிய 3 பேரும் சேர்ந்த துங்கபத்ரா, வராகி, ஆகும்பே உள்ளிட்ட ஆற்றுப்பகுதியில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் வெடிகுண்டு சோதனை நடத்தி பயிற்சி மேற்கொண்டது தெரிந்தது. தற்போது ஷாரிக், என்.ஐ.ஏ.வின் காவலில் உள்ளார். இந்த நிலையில் சிவமொக்காவில் அரங்கேறிய குண்டுவெடிப்பு சோதனை வழக்கு தொடர்பாக பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

அதில் 'பயங்கரவாத செயல்களை நிகழ்த்துவதற்காக அவர்களுக்கு கிரிப்டோகரன்சி மூலம் நிதி வழங்கப்பட்டது. இதற்காக பண்ணை வீடுகளில் தங்கி, சோதனை பயிற்சி மேற்கொண்டனர். முகமது ஷாரிக், கத்ரி கோவிலை தகர்க்கும் நோக்கில் சதித்திட்டம் தீட்டி இருந்தார்' என அதில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு முன்பாக குக்கர் குண்டு வெடித்ததாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com