

புதுடெல்லி,
டெல்லி மாநில முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 81. நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், டெல்லியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அவரது உயிர் பிரிந்தது.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஷீலா தீட்சித், 1998-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரை தொடர்ந்து 3 தடவை டெல்லி முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் ஆவார்.
காலமான ஷீலா தீட்சித் உடல், நேற்று முன்தினம் மாலையில், டெல்லி நிஜாமுதீனில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா ஆகியோர் நேற்று ஷீலா தீட்சித் இல்லத்துக்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், ஷீலா தீட்சித் உடல், அவரது இல்லத்தில் இருந்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது, சாலையின் இருபுறமும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கூடி இருந்தனர்.
காங்கிரஸ் தலைமையகத்தில் ஏராளமான காங்கிரசார் ஷீலா தீட்சித் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். ஷீலா தீட்சித் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
பின்னர், சோனியா காந்தி நிருபர்களிடம் கூறுகையில், ஷீலா தீட்சித் எனக்கு ஒரு மூத்த சகோதரி போலவும், தோழியாகவும் இருந்தார். எனக்கு மாபெரும் ஆதரவாக திகழ்ந்தார். அவரது மறைவு, காங்கிரசுக்கு பேரிழப்பு. அவர் எப்போதும் என் நினைவில் இருப்பார் என்றார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முதல்-மந்திரிகள் அசோக் கெலாட், கமல்நாத் மற்றும் அகமது படேல், கரன்சிங், கபில் சிபல், அஜய் மக்கான், அபிஷேக் சிங்வி, ரந்தீப்சிங் சுர்ஜேவாலா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் டி.ராஜா உள்பட ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், ஷீலா தீட்சித் உடல், ஊர்வலமாக டெல்லி நிகாம்போத் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.