ஜல்னா தடியடி சம்பவம் குறித்து கூடுதல் டி.ஜி.பி. விசாரணைக்கு மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே உத்தரவு

ஜல்னா தடியடி சம்பவம் குறித்து கூடுதல் டி.ஜி.பி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.
ஜல்னா தடியடி சம்பவம் குறித்து கூடுதல் டி.ஜி.பி. விசாரணைக்கு மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே உத்தரவு
Published on

ஜல்னா தடியடி சம்பவம்

மராட்டியத்தில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்னா மாவட்டம் அன்டர்வாலி கிராமத்தில் மராத்தா இடஒதுக்கீடு கேட்டு மனோஜ் பாட்டீல் என்பவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். அவரை அப்புறப்படுத்தி ஆஸ்பத்திரியில் சேர்க்க கடந்த வெள்ளிக்கிழமை போலீசார் அன்டர்வாலி கிராமத்துக்கு சென்றனர்.

அப்போது அங்கு திரண்டு இருந்த மக்கள் மனோஜ் பாட்டீலை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லவிடாமல் போலீசாரை தடுத்தனர். இதையடுத்து அங்கு வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். 15 அரசு பஸ்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இந்த வன்முறையில் 40 போலீசார் மற்றும் பெண்கள் உள்பட பலர் காயமடைந்தனர்.

கடும் கண்டனம்

இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. உத்தவ் தாக்கரே, சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மனோஜ் பாட்டீல், மராத்தா சமூகத்தினரை சந்தித்து பேசினர்.

இந்த விவகாரத்தில் உள்துறை பொறுப்பை கவனிக்கும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

விசாரணைக்கு உத்தரவு

இந்தநிலையில் ஜல்னா தடியடி சம்பவம் குறித்து சட்ட-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய் சக்சேனா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று புல்தானாவில் நடந்த கூட்டத்தில் பேசியதாவது:-

தடியடி சம்பவம் குறித்து கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய் சக்சேனா விசாரணை நடத்துவார். தேவைப்பட்டால் நீதி விசாரணை நடத்தப்படும். தவறு செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. ஜல்னா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துஷார் தோஷி கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். 2 துணை சூப்பிரண்டுகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சாதாரண மராத்தா குடும்பத்தில் பிறந்த எனக்கு உங்களின் வேதனை புரிகிறது. மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு கிடைக்க அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும். மராத்தா சமூகத்தினர் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com