டெல்லியில், அமித்ஷா முன்னிலையில் உதயன்ராஜே போஸ்லே எம்.பி. பா.ஜனதாவில் இணைந்தார்

தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உதயன்ராஜே போஸ்லே எம்.பி. நேற்று டெல்லியில் நடந்த விழாவில் அமித்ஷா முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தார்.
டெல்லியில், அமித்ஷா முன்னிலையில் உதயன்ராஜே போஸ்லே எம்.பி. பா.ஜனதாவில் இணைந்தார்
Published on

புதுடெல்லி,

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை முன்னிட்டு, அரசியல் ஆதாயம் கருதி எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஆளும் கட்சிகளான பா.ஜனதா, சிவசேனாவுக்கு தாவி வருகிறார்கள்.

அந்த வரிசையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், சத்தாரா தொகுதி எம்.பி.யுமாக பதவி வகித்து வந்த உதயன்ராஜே போஸ்லேயும், தான் பா.ஜனதாவில் சேரப்போவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். முன்னதாக அவர் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த நிலையில் உதயன்ராஜே போஸ்லே நேற்று டெல்லியில் நடந்த விழாவில் பா.ஜனதா தேசிய தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். விழாவில் பா.ஜனதா செயல் தலைவர் ஜே.பி. நட்டா, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு, அவரை வரவேற்றனர். இந்திய குடியரசு கட்சியின் தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலேயும் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

முன்னதாக உதயன்ராஜே போஸ்லே தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இவர் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வழித்தோன்றல் ஆவார். இவரது கட்சி தாவல் தேசியவாத காங்கிரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து விழாவில் அமித்ஷா பேசியதாவது:-

சத்ரபதி சிவாஜியின் வழித்தோன்றலான உதயன்ராஜே போஸ்லே பா.ஜனதாவில் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் பிரதமர் மோடி தலைமையை ஏற்றுக்கொண்டு, மராட்டிய பா.ஜனதா தலைவர்களில் ஒருவராக உழைக்க ஒப்புக்கொண்டு உள்ளார். அவரது வருகை மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு உதவிகரமாக இருக்கும்.

மராட்டியத்தில் 4-ல் 3 பங்கு தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடிக்கும். முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மராட்டியத்தின் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்தி, மாநிலத்தின் பெருமையை மீட்டெடுத்து உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மராட்டியத்தில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி 41 தொகுதிகளை அள்ளியது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வெறும் 5 தொகுதிகளை (காங்கிரஸ்-1, தேசியவாத காங்கிரஸ்-4) மட்டும் கைப்பற்றி படுதோல்வி அடைந்தது.

இதனால் மராட்டிய சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில், எதிர்க்கட்சியினர் ஆளும் கட்சிகளில் இணைந்து வருகின்றனர். இதுவரை எதிர்க்கட்சிகளை சேர்ந்த சுமார் 10 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆளும் கட்சிகளில் சேர்ந்து உள்ளனர். குறிப்பாக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்த மூத்த காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீலும் தனது பதவியை ராஜினாமா செய்து பா.ஜனதாவில் சேர்ந்தார். பின்னர் அவருக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com