

போபால்,
பத்திரிகையாளர் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை செய்வதற்கு மத்தியபிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுஹான் உத்தரவிட்டார்.
மத்திய பிரதேசத்தில் பிண்ட் மாவட்டத்தைச் சேர்ந்த, சந்தீப் சர்மா (35) 'டிவி' சேனலில் செய்தியாளராக பணிபுரிந்தார். சமீபத்தில், பிண்ட் மாவட்டத்தில், சந்தீப் சேகரித்த மணல் கொள்ளை குறித்த செய்தி, 'டிவி'யில் ஒளிபரப்பப்பட்டது. இதையடுத்து, மணல் கொள்ளை கும்பலிடம் இருந்து, தனக்கு கொலை மிரட்டல் வருவதாக, சந்தீப், போலீசாரிடம் புகார் அளித்து இருந்தார். அந்தப் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் மணல் கொள்ளையர்களுடன் போலீசாரும் உடந்தையாக இருப்பதாக சந்தீப் சந்தேகமடைந்தார்.
இந்தநிலையில் கடந்த ஞாயிறன்று வேகமாக வந்த ஒரு டிரக் மோதியதில், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த சந்தீப், சக்கரத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தார்.போக்குவரத்து நிறைந்த சாலையில் நடந்த இந்த கோர விபத்து குறித்த சி.சி.டி.வி வீடியோ திங்களன்று காலை வெளிவந்தது. இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடையச்செய்தது.
போலீஸ் மற்றும் மணல் மாபியா இடையே ஒரு நெருக்கமான தொடர்பை வெளிக்கொண்டு வந்ததால் இந்த விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கிடையில், பத்திரிகையாளரை கொன்ற டிரக்கை ஓட்டி சென்ற டிரைவர் திங்கள்கிழமை இரவு பிண்ட் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஒரு பெண்ணை காப்பாற்ற முயற்சிக்கும்போது தொலைக்காட்சி பத்திரிகையாளர் கீழே விழுந்ததாக அந்த டிரைவர் கூறினார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக,பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு எங்கள் முன்னுரிமை மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்தியபிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உறுதி அளித்தார்.