பா.ஜனதா தேசிய தலைவர் ஆகிறார் சிவராஜ் சிங் சவுகான்?

விதிஷா தொகுதியில் சிவராஜ் சிங் சவுகான் 11 லட்சம் வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
பா.ஜனதா தேசிய தலைவர் ஆகிறார் சிவராஜ் சிங் சவுகான்?
Published on

புதுடெல்லி,

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களை பெற்றுள்ளது. இந்தியா' கூட்டணிக்கு 234 தொகுதிகள் கிடைத்துள்ளன.

நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான பணிகளில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில் மத்திய பிரதேசம் மாநிலம் விதிஷா தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் 11,16,460 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், பா.ஜனதாவின் புதிய தேசிய தலைவராக மத்திய பிரதேசம் முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு முதல் பா.ஜனதாவின் தேசிய தலைவராக பதவி வகித்து வரும் ஜே.பி.நட்டாவின் பதவிக் காலம் இம்மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய தலைவராக சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அரியானா முன்னாள் முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார், பாஜக தேசிய செயலாளர் வினோத் தாவ்டே பெயர்களும் புதிய தலைவர் தேர்வு செய்வதில் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் 29 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. இதற்கு கடுமையாக உழைத்தவர் சிவராஜ் சிங் சவுகான். பா.ஜனதா கட்சி விதிப்படி, கட்சித் தலைவரின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். 2023 ஜனவரியில் நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில் மக்களவை தேர்தலையொட்டி மேலும் ஓராண்டுக்கு பதவி காலம் நீட்டிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com