

திருவனந்தபுரம்,
சிறுமியின் வயிற்றில் இருந்து ஒரு கிலோ எடையுள்ள தலைமுடி உருண்டை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றை சேர்ந்த 9 வயது சிறுமிக்கு நீண்ட நாட்களாக கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி இருந்து வந்துள்ளது. இதனை பார்த்த சிறுமியின் பெற்றோர் அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வயிறு மற்றும் சிறுகுடலில் அதிக அளவில் தலைமுடி தேங்கி, குடல் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அத்துடன் அறுவை சிகிச்சை செய்து அதை அகற்றவேண்டும் என்றும் கூறினர்.
அதன்படி, அறுவை சிகிச்சை செய்து சிறுமியின் வயிற்றில் இருந்து ஒரு கிலோ எடையுள்ள தலைமுடி உருண்டை வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இது ரபுன்செல் சிண்ட்ரோம் எனப்படும் ஒரு அரிய வகை நோய் என்றும், இந்த பாதிப்பு உள்ளவர்கள் தனது தலைமுடியை பிடுங்கி தானே உண்ணும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.