கேரளாவில் அதிர்ச்சி: இந்திய விளையாட்டு கழக விடுதியில் கபடி, தடகள வீராங்கனைகள் மர்ம மரணம்

ஒரு மணிநேரம் வாசலுக்கு உள்ளேயே விடவில்லை என வைஷ்ணவியின் தந்தை வேணு கூறியுள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரளாவின் கொல்லம் நகரில் இந்திய விளையாட்டு கழகத்தின் விடுதி ஒன்று உள்ளது. இதில் பல்வேறு விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தங்கி பயிற்சி பெற்றும், போட்டிகளில் பங்கேற்றும் வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த விடுதியில் கபடி பயிற்சி பெற்று வந்த சாண்டிரா ஏ (வயது 18) என்ற வீராங்கனை மற்றும் வைஷ்ணவி (வயது 15) என்ற தடகள வீராங்கனை என இருவரும் விடுதியில் மேல் தளத்தில் தூக்கு போட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
வைஷ்ணவி திருவனந்தபுரம் மாவட்டத்தின் முத்தக்கல் பகுதியை சேர்ந்தவர். சாண்டிரா, கோழிக்கோடு மாவட்டத்தின் சாலியம் பகுதியை சேர்ந்தவர். இதுபற்றி வைஷ்ணவியின் தந்தை வேணு செய்தி தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, இந்த மரணத்தில் சந்தேகம் உள்ளது. இதுதொடர்பாக விரிவாக விசாரிக்க வேண்டும் என கூறினார்.
கடந்த 15-ந்தேதி காலை 6 மணிக்கு தொலைபேசியில் அழைத்த விளையாட்டு கழகத்தில் பொறுப்பு வகிக்கும் அதிகாரி, உடனடியாக வரும்படியும், வைஷ்ணவியின் தாயை அழைத்து வர வேண்டாம் என்றும் கூறினார்.
ஆனால், ஒரு மணிநேரம் வாசலுக்கு உள்ளேயே விடவில்லை. வைஷ்ணவிக்கு என்ன ஆனது என அவர்கள் கூறவில்லை. நீண்ட வாக்குவாதத்திற்கு பின்னர் எம்.பி. பிரேம சந்திரன் வந்த பின்பு, என்னை கட்டிடத்தின் உள்ளே அனுமதித்தனர்.
போலீஸ் கமிஷனரும் வந்த பின்னரே, வைஷ்ணவியை பார்ப்பதற்கு என்னை உள்ளே அனுமதித்தனர் என்றார். சம்பவத்திற்கு முந்தின நாள் காலையில் வேணுவிடம் பேசிய வைஷ்ணவி, போட்டி ஒன்றில் தான் வெற்றி பெற்று விட்டேன் என மகிழ்ச்சியாக கூறியிருக்கிறார். பணம் வேண்டும் என கேட்டுள்ளார். வேணுவும் பணம் போட்டு விட்டுள்ளார். அன்றிரவு வைஷ்ணவி மீண்டும் வேணுவிடம் பேசியுள்ளார்.
இதனால், வைஷ்ணவி தற்கொலை செய்திருக்கமாட்டாள் என்றும் அதில் முழு நம்பிக்கை உள்ளது என்றும் வேணு கூறுகிறார். அவள் தங்கியிருந்த அறைக்கு பதிலாக மேல் தள அறையில் வைஷ்ணவியின் உடல் இருந்துள்ளது என்றும் குற்றச்சாட்டாக கூறினார்.
சாண்டிராவின் பெற்றோரான சிந்து மற்றும் ரவி கூறும்போது, இந்த விடுதி ஒரு சிறைச்சாலை போன்று உள்ளது என அடிக்கடி கூறுவாள். வீட்டுக்கு திரும்புவேன் என்ற நம்பிக்கையே இல்லை என்றும் அவள் கூறுவாள் என வருத்தத்துடன் கூறினர். கொல்லம் நகர போலீசார் 6 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அமைத்து, சக மாணவ மாணவிகளிடம் விசாரித்து வருகின்றனர்.






