அதிர்ச்சி சம்பவம்.. வாயில் துணியை திணித்து மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி

ஆடைகளை கிழித்து எறிந்து தாக்கியதுடன் வாயில் துணியை திணித்து பலாத்காரம் செய்ய வாலிபர் முயன்றதாக கூறப்படுகிறது.
பீதர்,
கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் உமனாபாத் தாலுகா ஹல்லிகேடா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு இளம்பெண் தனது தாயுடன் வசித்து வருகிறார். அந்த இளம்பெண் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். அவரது தாய் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இளம்பெண்ணின் தாய் வேலைக்கு சென்றுவிட்டார். இதனால் வீட்டில் இளம்பெண் மட்டும் தனியாக இருந்துள்ளார்.
அந்த சமயத்தில் அதே பகுதியை சேர்ந்த அபு பாஷா (வயது 36) என்பவர், அந்த இளம்பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். பின்னர் இளம்பெண்ணை வலுக்கட்டாயப்படுத்தி அபு பாஷா பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். ஆனால் அதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்ததால், அவரது ஆடைகளை கிழித்து எறிந்து தாக்கியதுடன் வாயில் துணியை திணித்து பலாத்காரம் செய்ய அபு பாஷா முயன்றுள்ளார்.
இதற்கிடையே கூலி வேலைக்கு சென்றிருந்த இளம்பெண்ணின் தாய் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் பயந்துபோன அபு பாஷா பலாத்கார முயற்சியை கைவிட்டு வெளியே அவசர, அவசரமாக ஓடி வந்துள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த இளம்பெண்ணின் தாய், அபு பாஷாவை பிடிக்க முயன்றுள்ளார். ஆனால் அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து அபு பாஷா தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் சம்பவம் பற்றி பெண்ணின் தாய், ஹல்லிகேடா போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் அபு பாஷா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
அதாவது எஸ்.சி., எஸ்.டி. சட்ட பிரிவு 329 (4) (வன்கொடுமை தடுப்பு சட்டம்), பி.என்.எஸ். 79 (பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் செயல்) , 3 (1) டபுள்யூ (வன்கொடுமை குற்றம்), 3 (2) (காயத்தை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த அபு பாஷாவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.






