சோபியான் என்கவுண்டர்: 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு, மூவர் காயம், துப்பாக்கி சண்டை தொடர்கிறது

சோபியானில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையிலான துப்பாக்கி சண்டையில் இரு ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
சோபியான் என்கவுண்டர்: 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு, மூவர் காயம், துப்பாக்கி சண்டை தொடர்கிறது
Published on

ஸ்ரீநகர்,

சோபியான் மாவட்டம் அவ்நீராவில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத்துறை தகவல்கள் கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் நேற்று இரவு தொடங்கினர். பாதுகாப்பு படையினர் சுற்றி வளைப்பதை அறிந்துக் கொண்ட பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. சண்டையில் இரு பாதுகாப்பு படை வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மூவர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்த வீரர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

பாதுகாப்பு படையினர் கொடுத்த பதிலடி தாக்குதலில் ஒரு பயங்கரவாதி இறந்துவிட்டான். மீதி இருக்கும் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ராணுவம் தீவிரமாக இறங்கி உள்ளது. இரண்டு, மூன்று பயங்கரவாதிகள் இருக்கலாம் என நம்பப்படுகிறது. அங்கு இருதரப்பு இடையேயும் கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. இதற்கிடையே இருதரப்பு இடையே நடைபெற்று வரும் சண்டையில் உள்ளூர் மசூதி ஒன்று தகர்க்கப்பட்டதாக வெளியாகிய தகவலை பாதுகாப்பு படை தரப்பு மறுத்து உள்ளது. சுட்டுக் கொல்லப்பட்டதாக நம்பப்படும் பயங்கரவாதியின் உடலானது மீட்கப்படவில்லை எனவும் பாதுகாப்பு படை தரப்பு தகவல்கள் தெரிவித்து உள்ளன.

பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்ட போது உள்ளூர்வாசிகள் இடையூறு ஏற்படுத்தும் விதமாக கற்களை வீசியும் தாக்குதல் நடத்தி உள்ளனர். சண்டை நடைபெற்று வரும் பகுதிக்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் விரைந்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com