நாளை பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா... உடல் நிலை 7 நாட்கள் கண்காணிப்பு

கலிபோர்னியாவின் நீண்ட கடற்கரையில் விண்கலம் பத்திரமாக தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 73-வது விண்வெளி குழுவில் இடம் பெற்றுள்ள ஆன் மெக்லைன், டகுயா ஒனிஷி, அலெக்ஸி ஜூப்ரிட்ஸ்கி, கிரில் பெஸ்கோவ், செர்ஜி ரைஷிகோவ், ஜானி கிம் மற்றும் நிக்கோல் அயர்ஸ் ஆகிய 7 விண்வெளி வீரர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுடன் கடந்த மாதம் 25-ந்தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 14 நாட்கள் பயணமாக சென்ற, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா மற்றும் பெக்கி விட்சன், திபோர் கபு மற்றும் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி ஆகிய 4 பேரும் சேர்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இவர்கள் ஆராய்ச்சியை முடித்து கொண்டு நாளை (திங்கட்கிழமை) சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தின் கதவுகள் இந்திய நேரப்படி பகல் 2 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து, பகல் 2.25 மணிக்கு சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரும் விண்கலத்திற்குள் நுழைய உள்ளனர்.
தொடர்ந்து மாலை 4.15 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்கலம் தனியாக பிரிக்கப்படும். பின்னர் மாலை 4.35 மணிக்கு விண்கலம் பூமியை நோக்கி தன்னுடைய பயணத்தை தொடங்கும். சுமார் 24 மணி நேர பயணத்திற்கு பிறகு வருகிற 15-ந்தேதி பகல் சுமார் 3 மணி அளவில் பூமியை வந்தடைகின்றனர்.
குறிப்பாக, வடஅமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி உள்ள கலிபோர்னியாவின் நீண்ட கடற்கரையில் விண்கலம் பத்திரமாக தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்கா கடற்படையும் தயார் நிலையில் உள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஆக்சியம் மிஷன்-4 தனியார் விண்கலத்தில் விண்வெளி வீரர்களின் பயணத்திற்காக விண்கலம் திறப்பு மற்றும் புறப்பாடு குறித்த நேரடி ஒளிபரப்பை நாசா ஆக்சியம் ஸ்பேஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்கள் இணைந்து நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
ஈர்ப்பு விசை இல்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விட்டு பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா 7 நாட்கள் நிவாரண நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார். இந்த நாட்களில் அவரது உடல் நிலை புவி ஈர்ப்பு விசைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதற்காக சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும். அவரது உடல் நிலையை உயர் அதிகாரிகள் கண்காணிப்பார்கள்.
அந்தவகையில் இஸ்ரோவின் விண்வெளி நிபுணர்கள், தனியார் மருத்துவ மற்றும் உளவியல் நிபுணர்கள் சுபான்ஷுவின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் உடற்தகுதியையும் தொடர்ந்து கண்காணிப்பார்கள் என இஸ்ரோ கூறியுள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்கு விண்வெளி அனுபவம் பெறுவதற்காக சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதற்காக இஸ்ரோ ரூ.550 கோடி கட்டணம் செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.






