சியாச்சின் பகுதியில் 38 ஆண்டுகளுக்கு பின் கண்டெடுக்கப்பட்ட இந்திய ராணுவ வீரரின் உடல்!

இந்தியாவின் 75வது ஆண்டு சுதந்திர தினத்தில் 38 ஆண்டுகளுக்கு முன் உயிர்நீத்த ராணுவ வீரரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சியாச்சின் பகுதியில் 38 ஆண்டுகளுக்கு பின் கண்டெடுக்கப்பட்ட இந்திய ராணுவ வீரரின் உடல்!
Published on

புதுடெல்லி,

சியாச்சின் பகுதியில் வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரரின் உடல், 38 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

லான்ஸ் நாயக் சந்திர சேகர் என்ர வீரரின் எலும்புக்கூடுகள் கடந்த ஆகஸ்ட் 13 அன்று சியாச்சினில் 16,000 அடி உயரத்தில் உள்ள ஒரு பழைய பதுங்கு குழியில் கண்டெடுக்கப்பட்டன.

1984 ஆம் ஆண்டு சியாச்சின் ஆபரேஷன் மேக்தூத்-இன் ஒரு பகுதியாக இருந்த சந்திரசேகர், பாயிண்ட் 5965ஐ கைப்பற்றும் பணி வழங்கப்பட்ட ராணுவ குழுவில் இருந்தார். இந்த பகுதியானது, பாகிஸ்தானியர்கள் கைப்பற்ற நினைத்த முக்கிய பகுதியாக இருந்தது. இதற்காக சியாச்சின் பனிப்பாறை பகுதிகளுக்கு 19 குமாவோன் படைப்பிரிவைச் சேர்ந்த ஒரு ராணுவ குழு உடனடியாக அனுப்பப்பட்டது.

மே 29, 1984இல் நடந்த சியாச்சின் ஆபரேஷன் மேக்தூத்தின் முதல் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். அங்கு பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர்கள் நின்று கொண்டிருந்த போது, இரவு திடீரென்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 18 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகினர்.

அதில் உயிரிழந்த 14 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், 5 பேரை காணவில்லை. இந்நிலையில், கோடை மாதங்களில், பனி உருகும்போது, காணாமல் போன வீரர்களைக் கண்டறிய ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. அப்போது தான் இம்மாதம் சியாச்சின் பனிப்பாறையில் உள்ள பழைய பதுங்கு குழிக்குள் வீரர் சந்திரசேகரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆகஸ்ட் 13 அன்று சியாச்சினில் 16,000 அடி உயரத்தில் ராணுவ வீரர் ஒருவரின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், இந்த உடல் யாருடையது என்பதை அடையாளம் காண, அவரது சடலத்துடன் ராணுவ எண் கொண்ட வட்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்மூலம், லான்ஸ் நாயக் சந்திர சேகரை அடையாளம் காண உதவியது. சந்திரசேகரின் மனைவி(65) மற்றும் இரண்டு மகள்கள், ஆகியோரின் 38 ஆண்டுகளாக நீண்ட காத்திருப்புக்கு பலன் கிடைத்துள்ளது. அவர் பலியானபோது அவருடைய இளைய மகளுக்கு நான்கு வயதும் மூத்தவளுக்கு எட்டு வயதும் ஆகும்.

இதனை தொடர்ந்து, அவரது சொந்த ஊரான ஹல்த்வானியில் அவரது உடல் அஞ்சலி செலுத்துவதற்காக கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு ராணுவ மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படும்.

இந்தியாவின் 75வது ஆண்டு சுதந்திர தினத்தில் 38 ஆண்டுகளுக்கு முன் உயிர்நீத்த ராணுவ வீரரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com