

தகவல் கசியவிட்ட வழக்கு
மராட்டியத்தில் போலீஸ் அதிகாரிகள் பணியிடமாற்றத்தில் நடந்த ஊழல் தொடர்பாக உளவு பிரிவு தலைவராக இருந்த ஐ.பி.எஸ். அதிகாரி ராஷ்மி சுக்லா தயாரித்த அறிக்கை கசிந்தது மற்றும் அரசியல் தலைவர்கள் போன் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக மும்பை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த 14-ந் தேதி விசாரணைக்கு வருமாறு மாநில முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.யும், சி.பி.ஐ. இயக்குனருமான சுபோத் ஜெய்ஸ்வாலுக்கு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
சி.பி.ஐ. இயக்குனர் பதில்
முன்னதாக வழக்கு தொடர்பான கேள்விகள் ஆகஸ்ட் 2-ந் தேதி அவருக்கு அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை. இந்தநிலையில் கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு செப்டம்பர் 6, 23-ந் தேதிகளிலும் உதவி கமிஷனர் ஒருவர் சுபோத் ஜெய்ஸ்வாலுக்கு நினைவுப்படுத்தி உள்ளார். ஆனாலும் அவர் பதில் அளிக்கவில்லை. அதன்பிறகு தான் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்தநிலையில் தகவல் கசிவு வழக்கு தொடர்பாக மும்பை போலீசார் அனுப்பிய கேள்விகளுக்கு சுபோத் ஜெய்ஸ்வால் பதில் அளித்து உள்ளார். 2 நாட்களுக்கு முன் அவர் பதில் அனுப்பியதாக அதிகாரி ஒருவர் கூறினார்.