பாரதீய ஜனதா - காங்கிரஸ் டுவிட்டரில் மோதல்; அமித்ஷா, எடியூரப்பா ‘சிறை பறவைகள்’ சித்தராமையா கிண்டல்

கர்நாடக அரசு பற்றி அமித்ஷாவின் விமர்சனத்திற்கு முதல்–மந்திரி சித்தராமையா டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். #Siddaramaiah #KarnatakaElection2018
பாரதீய ஜனதா - காங்கிரஸ் டுவிட்டரில் மோதல்; அமித்ஷா, எடியூரப்பா ‘சிறை பறவைகள்’ சித்தராமையா கிண்டல்
Published on

பெங்களூரு,

முதல்மந்திரி சித்தராமையா அமித்ஷாவையும், எடியூரப்பாவையும் சிறை பறவைகள் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா தலைமையில் மைசூருவில் நடந்த பரிவர்த்தனா யாத்திரையில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் கர்நாடகத்தில் தாங்கள் வெற்றி பெறுவதை காங்கிரசால் தடுக்க முடியாது எனக்கூறியதோடு, கர்நாடக அரசு மற்றும் முதல்மந்திரி சித்தராமையாவை அவர் விமர்சித்து பேசினார்.

மேலும், அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில், சித்தராமையாவின் அரசு ஊழலின் எல்லையை தாண்டிவிட்டது. சித்தராமையாஊழல் ஆகியவற்றுக்கு கர்நாடகத்தில் ஒரே பொருள். சித்தராமையா என்றால் ஊழல். ஊழல் என்றால் சித்தராமையா என கடுமையாக விமர்சனம் செய்தார்.

அமித்ஷாவின் இந்த விமர்சனத்துக்கு முதல்மந்திரி சித்தராமையா தனது டுவிட்டர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், நம்முடைய கர்நாடக தேர்தலில் முன்னாள் சிறை பறவையை முதல்மந்திரி வேட்பாளராக அறிவித்த இன்னொரு முன்னாள் சிறை பறவை இதை சொல்கிறது. பெயரளவுக்கு என் மீதும், என் அரசு மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறும் அவர் அதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை வழங்க முடியுமா?. பொய் கூறுவது எப்போதும் உதவாது. பொதுமக்கள் நம்பமாட்டார்கள் என்று கூறியிருந்தார்.

இதேபோல், மந்திரி பிரியங்க கார்கே தனது டுவிட்டர் பதிவில், சித்தராமையா மற்றும் அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஏதுவான முறையான ஆவணங்கள் அல்லது ஏதேனும் விசாரணையின் ஆதாரங்கள் உள்ளதா? என வினவியுள்ளார்.

மேலும் கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் தனது பதிவில் அருமையான காமெடி. கர்நாடகத்தின் மிகப்பெரிய ஊழல் அரசியல்வாதியுடன் (எடியூரப்பா) மேடையை பகிர்ந்து கொண்டிருக்கும் அமித்ஷா, வழக்கம்போல் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார். முறைகேடு புகார்களால் முந்தைய பா.ஜனதா ஆட்சியில் 14 மந்திரிகளின் பதவிகள் பறிக்கப்பட்டதோடு, சிலர் சிறைக்கும் சென்றனர் என குறிப்பிட்டு உள்ளார்.

டுவிட்டரில் அரசியல் தலைவர்களின் இந்த விமர்சனங்களுக்கு அந்தந்த கட்சியை சேர்ந்தவர்கள் ஆதரவு மற்றும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இதனால் டுவிட்டரில் பா.ஜனதாகாங்கிரஸ் கட்சியினர் இடையே கருத்து மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com