பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது சித்தராமையா கடும் தாக்கு: குற்றச்சாட்டுகள் அடங்கிய பட்டியலை வெளியிட்டார்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகள் அடங்கிய பட்டியலை வெளியிட்டு சித்தராமையா கடுமையாக தாக்கியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது சித்தராமையா கடும் தாக்கு: குற்றச்சாட்டுகள் அடங்கிய பட்டியலை வெளியிட்டார்
Published on

பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 12-ந் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தல் நெருங்குவதால் கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது. தேசிய கட்சிகளின் தலைவர்கள் கர்நாடகத்தில் முற்றுகையிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அரசியல் கட்சி தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் முதல்- மந்திரி சித்தராமையா பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது அடுக்கடுக் கான குற்றச்சாட்டுகளை நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பட்டியலிட்டு உள்ளார்.

இந்த தேர்தலிலும் நரேந்திர மோடி அரசின் பொய்யான வாக்குறுதிகள் என்ற தலைப்பில் அவர் குற்றச்சாட்டுகளை பதிவிட்டு உள்ளார். வரிசை எண் குறிப்பிட்டு அவர் வெளியிட்டு உள்ள குற்றச்சாட்டுகள் விவரம் வருமாறு:-

1. கருப்பு பணம் வெள்ளையாக மாறவில்லை.

2. மக்கள் தங்கள் வங்கி கணக்கில் ரூ.15 லட்சத்தை பெறவில்லை.

3. உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் வைத்திருந்த ரூபாய்க்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. மக்கள் ஏ.டி.எம். மையங்களிலும், வங்கிகளிலும் வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர்.

4. வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. வேலையில்லா பட்டதாரிகள் பக்கோடா விற்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

5. சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை குறைந்து வரும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது.

6. ஊழலற்ற அரசு அமைப்போம் என்று உத்தரவாதம் அளித்தார்கள். ஆனால் வங்கிகள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டார்.

மேலும் மோடி அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்றும், மதநல்லிணக்கத்துக்கு எதிரான பா.ஜனதா, சந்தர்ப்பவாத ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை தோற்கடிப்பதற்காகவே இந்த தேர்தலில் காங்கிரஸ் போராடுகிறது என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் சித்தராமையா தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com