நில முறைகேடு வழக்கில் சித்தராமையா குற்றமற்றவர்: லோக் ஆயுக்தா போலீசார் தகவல்


நில முறைகேடு வழக்கில் சித்தராமையா குற்றமற்றவர்: லோக் ஆயுக்தா போலீசார் தகவல்
x

கோப்புப்படம்

நில மோசடி வழக்கு தொடர்பாக லோக் ஆயுக்தா போலீசார் 11 ஆயிரம் பக்க அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம் கடந்த 2016ம் ஆண்டு கையகப்படுத்தியது. இதற்கு மாற்றாக அவருக்கு மைசூருவின் பிரதான இடத்தில் 14 வீட்டு மனைகளை ஒதுக்கியது. கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட இடத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வீட்டுமனைகள் ஒதுக்கியதில் முறைகேடு இருப்பதாககூறி சினேகமயி கிருஷ்ணா என்பவர் பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா, அவருடைய மனைவி மீது மைசூரு லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை முடிந்து இறுதி அறிக்கையை வருகிற 24-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய பெங்களூரு சிறப்பு கோர்ட்டு லோக் அயுக்தா போலீசாருக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில் நேற்று பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கு தொடர்பான இறுதி அறிக்கையை லோக்அயுக்தா போலீசார் தாக்கல் செய்தனர். 11 ஆயிரத்து 200 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் முதல்-மந்திரி சித்தராமையா மனைவி பாா்வதியிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட 3.16 ஏக்கர் நிலத்திற்கு மாற்றாகதான் 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

மேலும் அதிகாரிகள்தான் விதிமுறைகளை மீறி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா இந்த வழக்கில் குற்றமற்றவர் என லோக்அயுக்தா போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விசாரணை அறிக்கையை கோர்ட்டு ஏற்றுக் கொண்டது. இதனைத்தொடர்ந்து இந்த அறிக்கை குறித்து பதிலளிக்குமாறு புகார்தாரர் ஸ்நேகமயி கிருஷ்ணாவுக்கு லோக் ஆயுக்தா கோர்ட்டு உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை வருகிற 24-ந்தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story