ஜெர்மன் அதிபரை வரவேற்க நேரில் செல்லாத சித்தராமையா: பா.ஜ.க. கடும் கண்டனம்

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மைசூரு விமான நிலையத்திற்கு சென்று, காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தியை வரவேற்றார்.
பெங்களூரு,
ஜெர்மனியின் அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ், பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று இந்தியாவில் 2 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டார். இதற்காக நேற்று முன்தினம் காலை இந்தியாவுக்கு வருகை தந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி மற்றும் ஜெர்மனி அதிபர் மெர்ஸ் என இரு தலைவர்களும், தங்களுடைய உயர்மட்ட குழுவினருடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, இந்தியாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது பற்றிய ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
இரு தலைவர்களும் தற்போது நடந்து வரும் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கல்வி, திறன் மேம்பாடு மற்றும் செயல்பாடு ஆகியவற்றில் உள்ள ஒத்துழைப்பை மறுஆய்வு செய்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் ராணுவம், பாதுகாப்பு, அறிவியல், புதிய கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான வழிகளை இருவரும் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், 2-ம் நாளான நேற்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் இருவரும், பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த ஜெர்மன் அதிபரை வரவேற்க நேரில் செல்லாமல் தவிர்த்தனர்.
அதற்கு பதிலாக அவரை வரவேற்க கர்நாடக தொழில்துறை மந்திரி எம்.பி. பாட்டீலை அனுப்பி வைத்தனர். அவர்கள் 2 பேரும் மைசூரு விமான நிலையத்திற்கு சென்று, காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தியை வரவேற்றனர். முதல்-மந்திரி சித்தராமையாவின் இந்த முடிவை பா.ஜ.க. கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுபற்றி கர்நாடக சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவர் ஆர். அசோகா வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், உலகின் மிக பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றான ஜெர்மனியின் தலைவரை வரவேற்காமல் தவிர்த்து, கர்நாடகாவின் நலன்களை காங்கிரஸ் புறக்கணித்து உள்ளது.
கர்நாடகாவின் உலகளாவிய நிலைப்பாட்டை விட, அரசியல் விசுவாசம் மற்றும் கட்சியின் மேலிடத்திற்கு வளைந்து கொடுத்து போவது என செயல்படுகின்றனர் என குற்றச்சாட்டாக கூறினார். ஜெர்மனி அதிபர் மற்றும் அவருடைய குழுவினர் நேற்று மாலை பெங்களூருவில் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு புறப்பட்டனர்.






