ஊழல் அதிகரித்ததால் எடியூரப்பா நீக்கப்பட்டார் - எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா

ஊழல் அதிகரித்ததால் எடியூரப்பா நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பெங்களூரு,

பெங்களூரு பத்மநாபநகரில் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு, உணவு பொருட்களை வழங்கி பேசியதாவது:-

பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்று உறுதியளித்தார். அதன்படி கடந்த 7 ஆண்டுகளில் 14 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக இந்த காலக்கட்டத்தில் 12 கோடி வேலைகள் பறிபோய் உள்ளன. மோடி மோடி என்று கோஷம் போடும் இளைஞர்களுக்கு மூன்று நாமம் போட்டுள்ளார்.

கொரோனா 2-வது ஆலையில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். இதற்கு ஆட்சி நிர்வாகத்தை நடத்தும் பொறுப்பற்ற தலைவர்களே காரணம். பத்மநாபநகரில் பொது நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்றால் முன்னாள் மந்திரி ஆர்.அசோக்கின் அனுமதி பெற வேண்டும் என்று சொல்கிறார்கள். இந்த தொகுதி என்ன அவரது சொந்த சொத்தா?. இன்னும் 1 ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்.

அசோக் இங்கு ஆறு முறை வெற்றி பெற்றுள்ளார். அது பேதும். மாற்றியமைக்க வேண்டும் என்று கைகளை கூப்பியபடி நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன், கடந்த முறை பெங்களூருவில் 28 இடங்களில் 16 இடங்களை நாங்கள் வென்றோம். இந்த முறை, நாம் 28 இல் குறைந்தது 25 வெற்றி பெற வேண்டும்.

எடியூரப்பாவின் ஊழல் அதிகரித்த காரணத்தால் அவரை பா.ஜனதா மேலிடம் நீக்கியுள்ளது. இது தான் உண்மை. ஆர்.டி.ஜி.எஸ். மூலம் யாராவது லஞ்சம் வாங்கினார்கள் என்றால், அது எடியூரப்பா தான். இதை கூற காங்கிரசார் பயப்படக்கூடாது. கர்நாடகத்தில் மட்டும் கொரோனாவுக்கு 4 லட்சம் பேர் இறந்திருப்பார்கள். இந்தியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 50 லட்சமாக இருக்கும். ஆனால் மத்திய-மாநில அரசுகள் கொரோனா இறப்புகளை குறைத்துக் காட்டுகின்றன.

எடியூரப்பாவுக்கு நேரடியாக அரசியல் செய்ய தெரியாது. பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வருவது, ஆபரேஷன் தாமரை மூலம் எம்.எல்.ஏ.க்களை இழுத்து முதல்-மந்திரி ஆவது தான் எடியூரப்பாவுக்கு தெரிந்த விஷயம். பசவராஜ் பொம்மையை எடியூரப்பா தான் முதல்-மந்திரி ஆக்கியுள்ளார். அதனால் அவரது "ரப்பர் ஸ்டாம்ப்" ஆக தான் பசவராஜ் பொம்மை பணியாற்றுவார். தொழில் முதலீட்டாளர்கள் கட்சி பா.ஜனதா. காங்கிரஸ் ஏழைகளுக்கு ஆதரவாக பணியாற்றும் கட்சி என்று அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com