சித்து மூஸ்வாலாவுக்கு தம்பி பிறந்து விட்டான்... பெற்றோர் மகிழ்ச்சி

சித்து மூஸ்வாலாவின் தந்தை பல்காவுர் சிங்கை, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வேரிங் நேரில் சந்தித்து, பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.
சித்து மூஸ்வாலாவுக்கு தம்பி பிறந்து விட்டான்... பெற்றோர் மகிழ்ச்சி
Published on

சண்டிகார்,

பஞ்சாப்பில் பிரபல பாடகர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகராக அறியப்பட்டவர் சித்து மூஸ்வாலா. இவருக்கு அதிக அளவில் எதிரிகள் இருந்தனர். இதனால், காங்கிரஸ் தலைமையிலான அரசின்போது, வி.ஐ.பி. அந்தஸ்திலான பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.

பஞ்சாப்பில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி சார்பில் மான்சா தொகுதியில் போட்டியிட்ட சித்து அதில் தோல்வியுற்றார். இதன்பின், ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தது. வி.ஐ.பி. கலாசார பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பகவந்த் மான் அரசு 424 பேரின் வி.ஐ.பி. பாதுகாப்பை நீக்கியது. அவர்களில் சித்துவும் ஒருவர் ஆவார். இதனால், ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி போராட்டத்திலும் ஈடுபட்டது.

இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு மே 29-ந்தேதி மர்ம நபர்களால் சித்து மூஸ்வாலா சுட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அப்போது பரபரப்பு ஏற்படுத்தியது. அவரை மிக நெருங்கிய நிலையில், 30 முறை துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர்.

சித்து மூஸ்வாலா அவருடைய பெற்றோருக்கு ஒரே மகனாவார். இந்நிலையில், சித்துவின் தாயார் சரண் கவுர் ஐ.வி.எப். முறையில் கர்ப்பிணியானார். இதனால், சித்துவின் பெற்றோர் 2-வது குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்தனர். இதனை கவுரின் உறவினரான சம்கவுர் சிங் உறுதிப்படுத்தினார்.

சரண் கவுருக்கு மார்ச் மாதத்தில் 2-வது குழந்தை பிறக்கும் என சித்துவின் பெற்றோர் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில், சித்து மூஸ்வாலாவின் பெற்றோருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தொடர்ந்து, சித்து மூஸ்வாலாவின் தந்தை பல்காவுர் சிங்கை, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வேரிங் நேரில் சந்தித்து, பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.

இதுபற்றி பல்காவுர் சிங் வெளியிட்ட பேஸ்புக் பதிவில், சுபதீப்பை நேசிக்கும் லட்சக்கணக்கான ஆத்மாக்களின் ஆசிகளால், சுபதீப்பின் இளைய சகோதரரை கடவுள் எங்களுக்கு அளித்திருக்கிறார். வாஹேகுருவின் ஆசிகளால், எங்களுடைய குடும்பம் ஆரோக்கியத்துடன் உள்ளது. எங்கள் மீது அதிக அன்பு கொண்டுள்ள நலம் விரும்பிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என அதில் தெரிவித்து உள்ளார்.

பஞ்சாப்பில் மன்சா மாவட்டத்தில் உள்ள ஜவகர் கே கிராமத்திற்கு ஜீப்பில் தனது 2 நண்பர்களுடன் சித்து சென்று கொண்டிருந்தபோது, பின் தொடர்ந்து வந்த கும்பல் ஒன்று அவரை நோக்கி அதிரடியாக துப்பாக்கி சூடு நடத்தி விட்டு, தப்பி விட்டது. இதில் பலத்த காயமடைந்த சித்து மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். எனினும், அதில் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார்.

அவர் படுகொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னரே அவருக்கு வழங்கப்பட்டு வந்த அரசு பாதுகாப்பு நீக்கப்பட்டு இருந்தது. சித்து உயிரிழக்கும்போது அவருக்கு வயது 28. இந்நிலையில், அவருடைய பெற்றோருக்கு 2-வது குழந்தை பிறந்துள்ளது. சரண் கவுர் 58-வது வயதில் 2-வது முறையாக தாயாகி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com