பிரதமர் மோடி சவுதி அரேபியா பயணம்: தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து நீக்கப்படுமா..?


பிரதமர் மோடி சவுதி அரேபியா பயணம்: தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து நீக்கப்படுமா..?
x
தினத்தந்தி 19 April 2025 6:27 PM IST (Updated: 19 April 2025 6:29 PM IST)
t-max-icont-min-icon

சவுதி அரேபியாவின் இளவரசர் அந்நாட்டிற்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

புதுடெல்லி,

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து இஸ்லாத்தை பின்பற்றும் லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக சவுதி அரேபியாவின் மெக்காவில் கூடுகிறார்கள். அந்த வகையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 52 ஆயிரம் ஹஜ் பயணிகள், தனியார் ஹஜ் சேவை நிறுவனங்களின் மூலமாக அதற்கான கட்டணங்களை செலுத்தி, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவில் பதிவு செய்து. பயணத்திற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம், மினா பள்ளத்தாக்கில் இந்திய தனியார் ஹஜ் சேவை நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த தங்குமிட ஒதுக்கீடுகளை ரத்து செய்து, அவற்றை இதர நாடுகளுக்கு மறு ஒதுக்கீடு செய்துள்ளது. இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, இந்தியாவிலிருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 52 ஆயிரம் ஹஜ் பயணிகளின் புனித கடமையை கேள்விக்குறியாக்கி உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான். இவர் சவுதி அரேபியாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 22, 23ம் தேதி சவுதி அரேபியா செல்ல உள்ளார். அங்கு சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரை சந்தித்து பேசுகிறார்.

இரு நாட்டு தலைவர்களும் வர்த்தகம் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது. 2016 மற்றும் 2019ம் ஆண்டுகளில் பிரதமர் மோடி சவுதி அரேபியா பயணம் மேற்கொண்டார். இது பிரதமரின் மூன்றாவது பயணம் ஆகும்.

இந்நிலையில் பிரதமரின் சவுதி அரேபியா பயணத்தில் தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து குறித்து ஆலோசிக்கப்படும் என்றும், சவுதி அரசுடன் பேசி இந்திய பயணிகள் மீதான தடையை நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story