பாகிஸ்தானில் வசிக்கும் விமான கடத்தல் குற்றவாளிக்கு சீக்கிய அமைப்பு விருது

பாகிஸ்தானில் வசிக்கும் விமான கடத்தல் குற்றவாளிக்கு சீக்கிய அமைப்பு விருது வழங்கி கவுரவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாகிஸ்தானில் வசிக்கும் விமான கடத்தல் குற்றவாளிக்கு சீக்கிய அமைப்பு விருது
Published on

அமிர்தசரஸ்,

இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, 1981-ம் ஆண்டு, செப்டம்பர் 29-ந் தேதி ஸ்ரீநகரில் இருந்து டெல்லிக்கு சென்றுகொண்டிருந்தது. 111 பயணிகள், 6 சிப்பந்திகளுடனான அந்த விமானம், சீக்கிய அடிப்படைவாதிகளால் லாகூருக்கு கடத்தப்பட்டது. பிந்தரன்வாலே உள்ளிட்ட காலிஸ்தான் பயங்கரவாதிகளை விடுவிக்க இந்த கடத்தல் சம்பவம் அரங்கேற்றப்பட்டது. பாகிஸ்தான், அதிரடிப்படை கமாண்டோக்களை களம் இறக்கி, விமான பயணிகளை பத்திரமாக மீட்டது.

இந்த விமான கடத்தலில் தல்கல்சா என்ற பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் கஜிந்தர் சிங் உள்பட 5 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. மேலும், 2002-ம் ஆண்டு, இந்தியாவால் மிகவும் தேடப்படுகிற 20 பயங்கரவாதிகள் பட்டியலில் அவர் இடம் பிடித்தவர். இப்போது இவருக்கு உயர்ந்த சீக்கிய அமைப்பாக கருதப்படுகிற அகல் தக்த் அமைப்பு, பந்த் சேவக் விருது வழங்கி கவுரவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சீக்கிய சமூகத்துக்கு அவர் செய்துள்ள பங்களிப்புக்காக இந்த விருது என கூறப்படுகிறது. தற்போது கஜிந்தர் சிங், பாகிஸ்தானில் (லாகூரில்) வசித்து வருகிறார்.

இவரது தல் கல்சா அமைப்பு, 1982-ம் ஆண்டு மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அந்த தடை திரும்ப பெறப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com