திருமணத்துக்கு மறுத்ததால் சிக்கிம் இளம்பெண் கழுத்தை அறுத்துக் கொலை: காதலன் கைது

கடந்த ஒரு மாதமாக திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் இருவரும் வசித்தனர்.
திருமணத்துக்கு மறுத்ததால் சிக்கிம் இளம்பெண் கழுத்தை அறுத்துக் கொலை: காதலன் கைது
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு பெல்லந்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தொட்டகன்னஹள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பூர்வா லேஷ்பா (வயது 24). இவரது காதலி கங்கியா சூபா (22). இவரது சொந்த ஊர் சிக்கிம் ஆகும். பூர்வா லேஷ்பாவின் சொந்த ஊர் டார்ஜிலிங் ஆகும். இவர்கள் 2 பேரும் கடந்த ஓராண்டுக்கு முன்பு சிக்கிமில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார்கள்.

அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு 2 பேரும் சிக்கிமில் இருந்து பெங்களூருவுக்கு வந்தனர். பூர்வா லேஷ்பா பெல்லந்தூரில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்தார். பெண்களுக்கான சலூன் கடையில் கங்கியா வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு மாதமாக திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் அவர்கள் வசித்தனர்.

சம்பவத்தன்று நள்ளிரவு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு அதிகாலையில் கங்கியா வீட்டுக்கு வந்தார். அப்போது கங்கியா, பூர்வா லேஷ்பா இடையே வாக்குவாதம் உண்டானது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த பூர்வா லேஷ்பா சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து தனது காதலி கங்கியாவின் கழுத்தை அறுத்ததாக தெரிகிறது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

உடனே அங்கிருந்து பூர்வா லேஷ்பா தப்பி ஓடிவிட்டார். இது பற்றி பெல்லந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கங்கியா உடலை கைப்பற்றி விசாரித்தனர். தகவல் அறிந்ததும் ஒயிட்பீல்டு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சைதுலு அடாவத் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

அப்போது கடந்த ஓராண்டாக 2 பேரும் காதலித்து வந்ததுடன், கடந்த ஒரு மாதமாக ஒரே வீட்டில் தங்கி இருந்தது தெரிந்தது. இதற்கிடையே, கங்கியா வேறு ஒரு வாலிபருடன் பழகி வந்துள்ளார். இதுபற்றி பூர்வா லேஷ்பாவுக்கு தெரியவந் துள்ளது. உடனே அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கங்கியாவை வற்புறுத்தியுள்ளார். ஆனால் தற்போது திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்று அவர் மறுத்து வந்துள்ளார்.

இதே விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கங்கியாவின் கழுத்தை அறுத்து பூர்வா லேஷ்பா கொலை செய் தது தெரியவந்தது. இதுகுறித்து ஒயிட்பீல்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து பூர்வா லேஷ்பாவை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com