

காங்டாக்,
சிக்கிம் மாநில முதல்-மந்திரி பிரேம்சிங் தாமங், ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால், சட்டசபை பொது தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், அவரது சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா அதிக இடங்களில் வெற்றி பெற்றதால், அவர் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவரது தகுதி இழப்பு காலத்தை தேர்தல் கமிஷன் குறைத்ததால், அவர் தேர்தலில் போட்டியிடும் தகுதி பெற்றார்.
காலியாக இருந்த போக்லாக் காம்ரங் சட்டசபை தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட்டார். நேற்று ஓட்டு எண்ணிக்கையில், தாமங் அமோக வெற்றி பெற்றார். பதிவான 12 ஆயிரத்து 870 ஓட்டுகளில், அவர் 84 சதவீத ஓட்டுகளை, அதாவது 10 ஆயிரத்து 811 ஓட்டுகள் பெற்றார். சிக்கிம் ஜனநாயக முன்னணி வேட்பாளரை 8 ஆயிரத்து 953 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இதுபோல், மார்டம் ரம்டக் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், பா.ஜனதா வேட்பாளர் சோனம் வென்சுங்பா 6 ஆயிரத்து 150 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன்மூலம் சட்டசபையில் முதல்முறையாக பா.ஜனதா இடம்பெறுகிறது.