

இந்திய சினிமாவில் பழம்பெரும் பாடகியாக திகழ்ந்தவர் எஸ்.ஜானகி. ஜானகியம்மா, கான கோகிலா, தென்னிந்தியாவின் நைட்டிங்கேல், இசை அரசி என்று பல்வேறு பட்டங்களில் புகழப்படும் எஸ்.ஜானகி, இந்திய சினிமா முழுமைக்கும் அறியப்பட்ட பாடகி ஆவார். சுமார் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். 2016-ம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய எஸ்.ஜானகி மைசூருவில் தனது மகன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவரது ஒரே மகன் முரளி கிருஷ்ணா கடந்த ஜனவரி மாதம் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். மருமகள் உமா மற்றும் பேரப்பிள்ளைகளுடன் மைசூருவிலேயே ஜானகி வசித்து வந்தார்.
தனது ஒரே மகன் இறந்த துயரத்தில் இருந்த ஜானகியை உடல் நலக்கு றைவும் பற்றிக்கொண்டது. கடந்த சில மாதங்களாகவே அவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். நேற்று அவரது உடல்நிலை மோசம் அடையவே உடனடியாக மைசூருவில் உள்ள அப்பல்லோ ஆஸ் பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜானகிக்கு சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 88.
மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் ஜானகியின் உடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது.
பின்னர், ஜானகியின் உடல் மைசூருவில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அடக்கம் செய்ய அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மாலை 3 மணிக்கு இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
மைசூருவில் பாடகி எஸ்.ஜானகி நினைவாக நினைவகம் அமைக்க வேண்டுமென இசையமைப்பாளர் ஹம்சலேகா வேண்டுகோள் வைத்துள்ளார்.
பொதுமக்கள் அஞ்சலி நிறைவு பெற்றதையடுத்து மறைந்த பாடகி எஸ். ஜானகி உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன. பின்னர் காவல்துறை அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
பாடகி எஸ். ஜானகி உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று கர்நாடக முதல்-மந்திரி அறிவித்திருந்தார். அதன்படி கர்நாடக அரசு சார்பில் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து 30 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. கம்பீரமாக அணிவகுத்து நின்ற போலீசார் தலா 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அஞ்சலி செலுத்தினர்.
அவரது இறுதி சடங்கு மைசூரு நகரை அடுத்துள்ள கனியனஹுண்டி கிராமத்தில் அமைந்துள்ள தோட்டத்தில் நடைபெற்றது. அவரது உறவினர்கள் இறுதிச்சடங்கு செய்தனர். அதன்பிறகு அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.
பாடகி எஸ். ஜானகிக்கு திரைத்துறையினர், பொதுமக்கள் பிரியாவிடை அளித்தனர்.