அரசு-தனியார் பள்ளி, கல்லூரிகளில் தேசிய கீதம் கட்டாயம் பாட வேண்டும்; கர்நாடக அரசு உத்தரவு

கர்நாடகத்தில் அரசு-தனியார் பள்ளி, கல்லூரிகளில் தேசிய கீதத்தை கட்டாயம் பாட வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு-தனியார் பள்ளி, கல்லூரிகளில் தேசிய கீதம் கட்டாயம் பாட வேண்டும்; கர்நாடக அரசு உத்தரவு
Published on

பெங்களூரு:

கர்நாடக அரசு அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

தேசிய கீதத்திற்கு மரியாதை

கர்நாடகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தினமும் காலையில் மாணவர்கள் ஒரு இடத்தில் கூடி கூட்டாக தேசிய கீதம் பாடுவது மரபாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் மாநிலத்தில் சில பள்ளிகளில் அவ்வாறு தேசிய கீதத்தை பாடுவது இல்லை என்று புகார்கள் வந்துள்ளன. மாணவர்களுக்கு அரசியல் சாசனம் குறித்தும், தேசிய கொடி மற்றும் தேசிய கீதத்தை கவுரவிக்க வேண்டும் என்று கற்பிக்கப்படுகிறது.

கர்நாடக கல்வி சட்டத்தில் கூறியுள்ள அம்சங்களை அமல்படுத்தும் அதிகாரம் பள்ளி கல்வித்துறைக்கு உள்ளது. இதையடுத்து அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள சில அம்சங்கள், அரசியல் சாசனத்தை பின்பற்றுவது, அரசியல் சாசன அமைப்புகளை மதிப்பது, தேசிய கொடி மற்றும் தேசிய கீதத்திற்கு மரியாதை அளிப்பது போன்ற விஷயங்களை மாணவர்களுக்கு கட்டாயம் கற்பிக்க வேண்டும்.

சட்டப்படி நடவடிக்கை

அதாவது கர்நாடகத்தில் அரசு பள்ளிகள்-அரசு மானியம் பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் பி.யூ.கல்லூரிகளில் தினமும் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு காலையில் மாணவர்கள் ஒரே இடத்தில் கூடி கூட்டாக தேசிய கீதத்தை கட்டாயம் பாட வேண்டும். போதிய இடவசதி இல்லாத கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தங்களின் வகுப்பறையில் இருந்தபடி தேசிய கீதத்தை பாட வேண்டும். இதை மீறும் பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com