அனைத்து தேர்தலுக்கும் ஒரே வாக்காளர் பட்டியல்: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

அனைத்து தேர்தலுக்கும் ஒரே வாக்காளர் பட்டியலை பயன்படுத்துவது தொடர்பான பொதுநல மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.ஜி.தேவசாகயம் உள்ளிட்ட 3 ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சார்பில் வக்கீல் ஆகர்ஷ் கம்ரா சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், வாக்குரிமையை அரசமைப்பு சட்டம் உறுதி செய்துள்ள நிலையிலும், வாக்குப்பதிவு நாளில் வாக்களிக்கச் செல்லும்போது வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்பட்டிருக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக ஒரு தேர்தலில் வாக்களித்தவரின் பெயர் வேறொரு தேர்தலில் நீக்கப்படும்போது தேவையற்ற குழப்பம் ஏற்படுகிறது. அரசமைப்பு சட்டம் அளித்த உறுதியை இது தகர்க்கிறது.

எனவே, உள்ளாட்சி, சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தல்களுக்கு ஒரே மாதிரியான வாக்காளர் பட்டியலை பயன்படுத்தவும், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு வாக்குரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த பொதுநல மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ரிஷிகேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அதை பரிசீலித்த நீதிபதிகள், இது தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 3-வது வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com