

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பாக ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவுக்கு விளக்கம் அளிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டி, இண்டியா கூட்டணி கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் செயல்பாடுகளுக்கு தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் எழுத்துப்பூர்வமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.எஸ்ஐஆர் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று இண்டியா கூட்டணி வலியுறுத்தி வருகிறது.
இந்தக் கோரிக்கையை முன்வைத்து கடந்த 12-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டை நோக்கி பேரணி நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) மூத்த தலைவர் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து, எஸ்ஐஆர் நடைமுறைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் சவுகதா ராய், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், சிவசேனா (உத்தவ் தாக்கரே) மூத்த தலைவர் சஞ்சய் ராவத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட 13 பேர் மனுதாரர்களாக இடம்பெற்றுள்ளனர்.
மேலும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மூத்த தலைவர் மஹுவா மாஜி, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) மூத்த தலைவர் சுப்ரியா சுலே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூத்த தலைவர் முகமது பஷீர் உள்ளிட்டோரும் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். எஸ்ஐஆர் தொடர்பாக தேர்தல் ஆணையம் எடுத்த முடிவுகள், அந்த நடைமுறையைச் செயல்படுத்திய விதம் ஆகியவை குறித்த அனைத்து ஆவணங்களையும் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அடுத்த விசாரணையின்போது மனுதாரர்களில் ஒருவரின் நடத்தை தொடர்பாக கேள்வி எழுப்ப விரும்புவதாக தலைமை நீதிபதி தெரிவித்தார்இதைத்தொடர்ந்து, மனுவில் எழுப்பப்பட்டுள்ள விவகாரங்கள் குறித்து பதில் அளிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்துக்கும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.