

புதுடெல்லி,
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்காக சிறப்பு மென்பொருள் பயன்படுத்தப்பட் டதா? என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அது அறிவுசார் சொத்துரிமை தொடர்பானது என்பதால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில்(எஸ்.ஐ.ஆர்.) பெரிய முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி போராட்டங்கள் நடத்தி வருகின்றன. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலகுமாறு அவர்கள் வற்புறுத்துகிறார்கள். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் ஒரு சர்ச்சைக்குரிய விவகாரமாக இருக்கிறது.
இந்த நிலையில் தெலுங்கானாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முஜீப் அயூப் என்பவர், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்காக வாக்காளர் பட்டியல்களில் உள்ள பிழைகள் மற்றும் முரண்பாடுகளைக் கண்டறிய சிறப்பு மென்பொருள் ஏதேனும் பயன்படுத்தப்பட்டதா? அந்த மென்பொருள் என்ன என்பது போன்ற கேள்விகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டிருந்தார்.
ஆனால் தேர்தல் ஆணையம் இதற்கு சரியான நேரடியான பதிலை அளிக்கவில்லை. சிறப்பு மென்பொருள் எதுவும் இதற்காக உருவாக்கப்படவில்லை என்றும், கொள்முதல் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், இந்த விவகாரம் வர்த்தக ரகசியங்கள், வணிக நம்பிக்கை மற்றும் அறிவுசார் சொத்துரிமை தொடர்பானது என்பதால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து விலக்கு பெற்றது எனவும் தெரிவித்துள்ளது.
ஒரு வாக்காளரை சேர்ப்பதா அல்லது நீக்குவதா? என்பதை உண்மைகள் மற்றும் பதிவுகளின் அடிப்படையில் வாக்காளர் பதிவு அதிகாரிகள் தீர்மானிக்கிறார்கள் என்றும் கூறியுள்ளது. சம்பந்தப்பட்ட தொகுதியின் வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்கும், திருத்துவதற்கும் பொறுப்பான சட்டப்பூர்வ அதிகாரம் சம்பந்தப்பட்ட தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரிக்கு இருக்கிறது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது.