நாய் குட்டியை காப்பாற்ற கோவிலில் சனிதோஷ வழிபாடு நடத்திய சகோதரிகள்... நெகிழ்ச்சி சம்பவம்

சனிதோஷ வழிபாடு நடத்தினால் செல்ல நாய்க்குட்டிக்கு நோய் சரியாகும் என அந்த சகோதரிகள் நினைத்தனர்.
கோட்டயம்,
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சகோதரிகளான 2 பெண்கள், தாங்கள் வளர்த்து வந்த செல்ல நாய் குட்டிக்கு ஏற்பட்ட உடல்நல பிரச்சினை சரியாக வேண்டி கேரளாவுக்கு வந்து வழிபாடு நடத்திய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இதுதொடர்பான வீடியோவும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஸ்வேதா மற்றும் கோமளம். இருவரும் சகோதரிகள். தங்களுடைய வீட்டில் 2 நாய்க்குட்டிகளை செல்லமாக வளர்த்தனர். அந்த நாய்களுக்கு சின்னு, சிஞ்சு என பெயரிட்டிருந்தனர். இந்த நிலையில் சின்னு என்ற நாய்க்குட்டிக்கு சிறுநீரக நோய் பாதிப்பு ஏற்பட்டது.
அதற்கு மராட்டிய மாநிலத்தில் எராளமான மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளித்து பார்த்துள்ளனர். ஆனால் நாய் குட்டிக்கு சிறுநீரக நோய் சரியாகவில்லை. மருத்துவம் கை கொடுக்காததால் சனிதோஷ வழிபாடு நடத்தினால் செல்ல நாய்க்குட்டிக்கு நோய் சரியாகும் என அந்த சகோதரிகள் நினைத்தனர். இதற்கு இருவரும் தேர்ந்தெடுத்த இடம், கேரளாவில் உள்ள ஒரு கோவிலாகும்.
அதன்படி கோட்டயம் மாவட்டம் குருப்பந்தரா ஓமல்லூரில் உள்ள சனீஸ்வரன் கோவிலுக்கு 2 நாய்களையும் தூக்கிக் கொண்டு வந்தனர். அங்கு நாய்க்கு வந்த நோய் குணமாக கோரி சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார். அதாவது சனிதோஷம் நீங்கவும், நோய்கள் குணமாகவும், பக்தர்கள் சாயாதானம் பிரசாதம் படைத்து வழிபாடு நடத்துவார்கள். இந்த பிரசாதம் படைத்து வழிபடுவதன் மூலம் சனிபகவானின் அருள் கிடைத்து துன்பங்கள் மற்றும் நோய் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
இதனால் மராட்டிய சகோதரிகள் தங்களது செல்ல நாய்க்குட்டியின் நோய் நீங்க சாயாதான பிரசாதம் படைத்தனர். இந்த கோவிலில் வழக்கமாக செல்ல பிராணிகள் கொண்டு வர அனுமதி இல்லை. ஆனால் மராட்டிய சகோதரிகள், தங்களின் பிரச்சினை பற்றி கூறியதை தொடர்ந்து அவர்கள் நாய்க்குட்டிகளை கோவிலுக்குள் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பூஜைக்கு பிறகு தங்களின் செல்ல நாய்க்கான நோய் தீரும் என்ற நம்பிக்கையுடன் கேரளாவில் இருந்து மராட்டியத்திற்கு திரும்பிச் சென்றனர். இந்த சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.






