

லக்னோ,
உத்தர பிரதேசத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சியின் எம்.எல்.ஏ.வான குல்தீப் சிங் செங்கார் தனது சகோதரர்களுடன் சேர்ந்து தன்னை கற்பழித்து விட்டார் என 18 வயது இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில், இளம்பெண்ணின் தந்தை பப்பு சிங் (வயது 50) எம்.எல்.ஏ.வின் சகோதரர் அதுல் சிங் மற்றும் சிலரால் தாக்கப்பட்டு உள்ளளனர். தொடர்ந்து பப்பு சிங் ஆயுத சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஆனால் போலீஸ் காவலில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் நேற்று உயிரிழந்து விட்டார். எம்.எல்.ஏ.வின் தூண்டுதலால் சிறைக்குள் வைத்து தனது தந்தையை கொலை செய்து உள்ளனர் என இளம்பெண் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். இந்த நிலையில் அதுல் சிங் இன்று கைது ஆகியுள்ளார்.
இளம்பெண் கற்பழிப்பு மற்றும் அவரது தந்தை சிறை காவலில் மரணம் அடைந்தது ஆகியவற்றை பற்றி விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஏ.டி.ஜி. (சட்டம் மற்றும் ஒழுங்கு) அனந்த குமார் கூறியுள்ளார்.