சிவகாசி பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் - மத்திய சுற்றுச்சூழல் மந்திரியிடம், வைகோ கோரிக்கை

சிவகாசி பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் மந்திரி ஹர்ஷவர்த்தனிடம் வைகோ கோரிக்கை மனு அளித்தார்.
சிவகாசி பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் - மத்திய சுற்றுச்சூழல் மந்திரியிடம், வைகோ கோரிக்கை
Published on

புதுடெல்லி,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிவகாசி நகரத்திலும், அதைச் சுற்றிலும் உள்ள 1,070 பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்பட்டு 8 லட்சம் தொழிலாளர் குடும்பங்களின் எதிர்கால வாழ்வே சூன்யமாகிவிட்டது.

பட்டாசுகள் உற்பத்தி செய்ய முடியாத நிலையை நிபந்தனைகள் மூலம் சுப்ரீம் கோர்ட்டு ஏற்படுத்திவிட்டது.

எனவே இதுகுறித்து பிப்ரவரி 7-ந் தேதி மாலை 5 மணிக்கு பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமனை அவரது அலுவலகத்தில் நானும், இந்தியன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் வெங்கடேசும், தற்போதைய இணைச் செயலாளர் ராஜப்பனும் சென்று சந்தித்தோம்.

ஏற்கனவே பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளை அழைத்துச் சென்று சுற்றுச்சூழல் மந்திரி ஹர்ஷவர்த்தனை சந்தித்து நிலைமையை எடுத்து விளக்கி இருக்கிறார். அதேபோல பிரதிநிதிகளை பிரதம அமைச்சக அதிகாரிகளிடமும் பேசுவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். அதனால் தான் நான் அவரை சந்தித்தேன்.

சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷவர்த்தனை செல்போனில் தொடர்புகொண்டு, வைகோ உங்களைச் சந்திக்க விரும்புகிறார் என்று கூறினார். அதன்படி நான் பட்டாசு தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்தும், அவற்றைத் தவிர்ப்பதற்குத் தேவையான கோரிக்கையைச் சுட்டிக்காட்டியும் கோரிக்கை மனு தயாரித்து மந்திரி ஹர்ஷவர்த்தனை நிர்வாகிகளுடன் சென்று சந்தித்தேன்.

சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள பட்டாசு தொழில் வழக்கு வருகிற மார்ச் 1-ந் தேதி விசாரணைக்கு வருவதால், மத்திய அரசு தரப்பிலிருந்து உச்சநீதிமன்ற நிபந்தனைகளைத் தளர்த்துவதற்கு உரிய வேண்டுகோளோடு மத்திய அரசு பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்ய ஆவன செய்யுமாறு கேட்டுக்கொண்டேன்.

நிபந்தனைகளை முழுமையாக நீக்க முடியாவிடினும், உண்மை நிலைமையை எடுத்து விளக்கி மத்திய அரசு பட்டாசு தொழிலைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை மிகுந்த கனிவுடன் கேட்டுக்கொண்டதோடு, மந்திரி ஹர்ஷவர்த்தன் என்னை மிகவும் அன்பாக நடத்தினார்கள். மத்திய வர்த்தக தொழில்துறை மந்திரி சுரேஷ் பிரபுவையும் நான் சந்தித்து பட்டாசு தொழிலைப் பாதுகாப்பதற்குத் தேவையான கோரிக்கை மனுவைக் கொடுத்தேன். அவரும் ஆவன செய்வதாக உறுதி அளித்தார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com