சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவுக்கு பதில்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்குமாறு, தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு ஜூன் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், கடந்த அக்டோபரில் அளித்த புகாரில் பதிவான வழக்கில் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட ஐகோர்ட்டு, சாமியார் என கூறிக்கொள்ளும் மனுதாரருக்கு எதிரான புகார்களின் தன்மை, குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை கருத்தில் கொண்டும், மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் அவர் தலைமறைவாக வாய்ப்பு உள்ளது என்பதாலும், ஜாமீன் வழங்க முடியாது என மனுவை கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி தள்ளுபடி செய்தது.

அந்த உத்தரவை எதிர்த்து சிவசங்கர் பாபா சார்பில் வக்கீல் ஸ்வாதி ஜிந்தல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.

சிவசங்கர் பாபா சார்பில் மூத்த வக்கீல் சித்தார்த் லூத்ரா ஆஜராகி, சிவசங்கர் பாபாவுக்கு எதிராக தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவருக்கு பல்வேறு நோய்களின் பாதிப்பு உள்ளது. மேல்முறையீட்டு மனுவை பரிசீலித்து ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.

வாதத்தை பரிசீலித்த நீதிபதிகள், சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மேல்முறையீட்டு மனு தொடர்பாக 2 வாரங்களில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com