மராட்டியத்தில் மராத்தா போராட்டத்தில் மீண்டும் பயங்கர வன்முறை, வாகனங்கள் தீ வைத்து எரிப்பு

மராட்டியத்தில் மராத்தா போராட்டத்தில் மீண்டும் பயங்கர வன்முறை வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. #MarathaProtest
மராட்டியத்தில் மராத்தா போராட்டத்தில் மீண்டும் பயங்கர வன்முறை, வாகனங்கள் தீ வைத்து எரிப்பு
Published on

மும்பை,

மராட்டியத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீத இடஒதுக்கீடு கேட்டு வரும் மராத்தா சமுதாயத்தினர் கோரிக்கையை நிறைவேற்றி கொள்ள வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக மாநிலம் போர்க்களமாக மாறி வருகிறது. அண்மையில் அவுரங்காபாத்தில் வாலிபர் ஒருவர் ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் மராத்தா சமுதாயத்தினர் போராட்டத்தை மிக தீவிரமாக்கியது. போராட்டத்திற்கு ஆதரவாக உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலையும் தொடர்கிறது.

மராத்தா சமுதாயத்தினரின் இடஒதுக்கீடு போராட்டத்துக்கு ஆதரவாக 5 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமுதாயத்தினர் வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டு வருவது மராட்டியத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில், மராத்தா சமுதாயத்தினரின் இடஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படாததை கண்டித்து, நேற்று இரவு அவுரங்காபாத்தை சேர்ந்த பிரமோத் ஜெய்சிங் ஹோரே(35) என்ற மேலும் ஒரு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்துக்கு ஆதரவாக நான் எனது உயிரை மாய்த்து கொள்கிறேன் என பேஸ்புக் மற்றும் வாட்ஸ்-அப் சமூக வலைதளங்களில் பதிவிட்டு விட்டு அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

இடஒதுக்கீடு பிரச்சினையில் இறுதி முடிவு எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று ஜெய்சிங் ஹோரேயின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இடஒதுக்கீடு போராட்டத்தின் ஒரு பகுதியாக புனே அருகே உள்ள சாக்கன், சோலாப்பூர் ஆகிய பகுதிகளில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக அங்குள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அரசு போக்குவரத்து கழகம் பஸ் சேவைகளை ரத்து செய்தது.

இதன் காரணமாக அரசு பஸ்கள் அங்குள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. சாக்கனில் மாநில அரசை கண்டித்து மராத்தா சமுதாயத்தினர் பேரணி நடத்தினார்கள். அப்போது, பயங்கர வன்முறை வெடித்தது. சாலைகளின் குறுக்கே டயர்களை போட்டு எரித்தனர். அரசு பஸ்கள் மீது போராட்டக்காரர்கள் சரமாரியாக கற்களை வீசி தாக்கினார்கள். சாக்கன் பகுதியில் 6 பஸ்கள் உள்ளிட்ட 25 வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன. அந்த பஸ்கள் தீயில் எரிந்து நாசமாகின.

வன்முறையாளர்கள் 4 சிவசாகி பஸ்களை அடித்து நொறுக்கினார்கள். வன்முறையில் மொத்தம் 80 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. வன்முறையில் ஈடுபட்டிருந்தவர்கள் சாக்கன் போலீஸ் நிலையத்தையும் அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். அவர்களை தடுக்க முயன்ற போலீசாரையும் கண்மூடித்தனமாக தாக்கினார்கள். இதில் 4 போலீசார் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். வன்முறையாளர்களை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விரட்டி அடித்தனர். இதன் காரணமாக சாக்கன் பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது. இதையடுத்து, அதிரடியாக புனே மாவட்ட நிர்வாகம் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com