ஒடிசாவில் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை; பயங்கரவாத எதிர்ப்பில் குறிப்பிடத்தக்க மைல்கல் - அமித்ஷா


ஒடிசாவில் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை; பயங்கரவாத எதிர்ப்பில் குறிப்பிடத்தக்க மைல்கல் - அமித்ஷா
x

நக்சல் பயங்கரவாதம் இல்லாத மாநிலமாக மாறுவதற்கான விளிம்பில் ஒடிசா நிற்கிறது என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் சக்காபட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்ட் அமைப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இதில், பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி சூட்டில் மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த 2 பெண்கள் உள்பட மொத்தம் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதில் குறிப்பாக 69 வயதான முக்கிய மாவோயிஸ்ட் தலைவர் கணேஷ் உய்கே என்பவரும் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். அவரைப் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1.1 கோடி சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஒடிசாவில் நக்சல் இயக்கங்களை கணேஷ் உய்கே வழிநடத்தி வந்தார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஒடிசாவில் 6 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது பயங்கரவாத எதிர்ப்பில் குறிப்பிடத்தக்க மைல்கல் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“நக்சல் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பயணத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல். ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் நடத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையில், மாவோயிஸ்ட் குழு தலைவர் கணேஷ் உய்கே உள்பட 6 நக்சல்கள் இதுவரை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த முக்கிய திருப்புமுனையின் மூலம், ஒடிசா மாநிலம் முழுமையாக நக்சல் பயங்கரவாதம் இல்லாத மாநிலமாக மாறுவதற்கான விளிம்பில் நிற்கிறது. மார்ச் 31, 2026-க்கு முன்னதாக நக்சல் பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story