டவ்தே புயல்; மராட்டியத்தில் 6 பேர் பலி

டவ்தே புயல் இன்று கரையை கடக்கவுள்ள நிலையில் மராட்டியத்தில் 6 பேர் பலியாகியுள்ளதாக முதல்வர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
டவ்தே புயல்; மராட்டியத்தில் 6 பேர் பலி
Published on

மும்பை,

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது. அதற்கு டவ்தே என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த புயல் தீவிர புயலாக மாறி, கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

டவ்தே புயல் நேற்று அதிதீவிர புயலாக மாறியது. அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள புயல், நாளை (செவ்வாய்க்கிழமை) காலை குஜராத் கடலோரப்பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதுடன் பலத்த மழை பெய்யும். குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

மராட்டிய மாநில கடலோர பகுதிகளில் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்துவருகிறது. மும்பையில் மணிக்கு 100 கிமீ வேகத்தில் காற்று வீசியது. புயலின் காரணமாக மும்பை விமான நிலையம் 11 மணிக்கு மூடப்பட்டது. பந்த்ரா-ஒர்லி கடல்வழிப் பாதையும் மூடப்பட்டது. மராட்டியத்தின் ஜுஹு பகுதியில் அதிக கனமழை பெய்ததுடன், சூறாவளி காற்றும் வீசியது. இதில் மரங்கள் வோரோடு சாய்ந்தனர். தெருக்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், டவ்தே புயல் இன்று கரையை கடக்கவுள்ள நிலையில் மராட்டியத்தில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளதாக முதல்வர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

டவ்தே புயலால் ஏற்பட்ட பாதிப்பில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர், 9 பேர் காயமடைந்துள்ளனர். 4 விலங்குகள் இறந்துள்ளன. மேலும், புயல் பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்து நிவாரணப் பணிகளை விரைந்து செய்யுமாறு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com