நேபாளத்துக்கு பெண்களை கடத்த முயன்ற சதி முறியடிப்பு: 6 பேர் மீட்பு

நேபாளத்தில் உள்ள நடன விடுதிகளில் தங்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்ததாக அந்த பெண்கள் தெரிவித்தனர்.
நேபாளத்துக்கு பெண்களை கடத்த முயன்ற சதி முறியடிப்பு: 6 பேர் மீட்பு
6 பேர் மீட்பு
Published on

டார்ஜிலிங்,

இந்திய-நேபாள எல்லையான மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங் மாவட்டம் பனிடங்கி நகரம் வழியாக, நேபாள நாட்டுக்கு பெண்கள் சிலர் கடத்தப்படுவதாக துணை ராணுவப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், எல்லையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சாஷஸ்திரா சீமா பால் படை வீரர்கள், சந்தேகப்படும்படியாக எல்லையை கடக்க முயன்ற 2 ஆண்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்களுடன் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 4 இளம்பெண்கள் மற்றும் 2 பெண்கள் என மொத்தம் 6 பேர் இருந்தனர்.

விசாரணை

அந்த பெண்களை எல்லையை கடந்து கூட்டி செல்வதற்கான எந்தவித முறையான ஆவணங்களும் அந்த 2 ஆண்களிடம் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், 6 பெண்களிடமும் தனியாக விசாரணை நடத்தினர்.

நடன விடுதி வேலை

அப்போது, நேபாளத்தில் உள்ள நடன விடுதிகளில் தங்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்ததாக அந்த பெண்கள் தெரிவித்தனர். தங்களை கடத்தி செல்வது குறித்த எந்த விவரமும் தங்களுக்கு தெரியாது என்றும் அவர்கள் கூறினர்.

போலீசில் ஒப்படைப்பு

இதையடுத்து, வேலை வாங்கி தருவதாக கூறி பெண்களை நேபாளத்திற்கு கடத்த முயன்ற கும்பலின் சதியை துணை ராணுவ வீரர்கள் முறியடித்தனர். மீட்கப்பட்ட 6 பெண்களையும், அவர்களை கடத்தி வந்த 2 ஆண்களையும் எல்லை பாதுகாப்பு படையினர் உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்களை கடத்த முயன்ற மனித கடத்தல் கும்பலின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com