சமூக வலைத்தளங்களில் நேரு குடும்பம் பற்றி அவதூறு; இந்தி நடிகை கைது

சமூக வலைத்தளங்களில் நேரு குடும்பத்தினர் பற்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட இந்தி நடிகையை ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர்.
சமூக வலைத்தளங்களில் நேரு குடும்பம் பற்றி அவதூறு; இந்தி நடிகை கைது
Published on

கோட்டா,

பிரபல இந்தி நடிகை பாயல் ரோகத்கி. இவர் 20-க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்துள்ளார். அடிக்கடி ஏதேனும் கருத்துகள் கூறி சர்ச்சையில் சிக்கி வருகிறார். இதற்கிடையே ஜவகர்லால் நேரு, மோதிலால் நேரு, இந்திரா காந்தி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பற்றி பாயல் ரோகத்கி அவதூறாக பேசிய ஒரு வீடியோவை கடந்த செப்டம்பர் மாதம் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ சர்ச்சையை கிளப்பியது.

இதுபற்றி ராஜஸ்தான் மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சர்மேஷ் சர்மா, பண்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கடந்த அக்டோபர் மாதம் 10-ந்தேதி தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இதற்கு பதில் அளிக்குமாறு நடிகை பாயல் ரோகத்கிக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

இதற்கிடையே கடந்த வியாழக்கிழமை தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி அங்குள்ள கோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது. இந்தநிலையில், ராஜஸ்தான் போலீசார் நேற்று குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து நடிகை பாயல் ரோகத்கியை கைது செய்தனர்.

இதுபற்றி பாயல் ரோகத்கி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கூகுள் தகவல்களை வைத்து மோதிலால் நேரு குறித்து வீடியோ வெளியிட்டதற்காக நான் இன்று(அதாவது நேற்று) ராஜஸ்தான் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளேன் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பிரதமர் நரேந்திர மோடிக்கும், உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கும் டேக் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com