ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்.. காரணம் கேட்டு அதிர்ந்த போலீசார்

வகுப்பில் கேட்ட கேள்விகளுக்கு சரியாகப் பதிலளிக்காததால் ஆசிரியர், அந்த மாணவனை திட்டியதாக தெரிகிறது.
ருத்ராபூர்,
உத்தரகாண்ட் மாநிலம் காசிபூர் நகரத்தில் உள்ள ஒரு பள்ளியில் ககன்சிங் (வயது 35) என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். ஒரு வகுப்பில் பாடம் நடத்திய ககன்சிங், அங்கு படித்த 9-ம் வகுப்பு மாணவனின் கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவன், டிபன் பாக்சில் துப்பாக்கியை மறைத்து எடுத்து வந்தான்.
பாடம் நடத்திக்கொண்டிருந்த ககன்சிங்கின் முதுகில் சுட்டார். இதில் நிலைகுலைந்து உயிருக்கு போராடிய ஆசிரியரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஆபரேசன் செய்து தோட்டாவை அகற்றினர். தற்போது அவர் நலமாக இருப்பதாக தெரிகிறது.
சம்பவம் நடந்த இடத்திலிருந்து தப்பி ஓடிய மாணவனை பின்னர் போலீசார் கைது செய்து விசாரித்தபோது, ஆசிரியர் தன்னை அடித்ததால் பழிவாங்கும் நோக்கத்தில் சுட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான். இதனைக் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






