

புதுடெல்லி,
இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், 63 ஆயிரத்து 490 பேருக்கு தொற்று உறுதியானது. முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் (65 ஆயிரத்து 2) இது சற்றே குறைவு என்பது பதிவு செய்யத்தக்கதாகும்.
இதன் மூலம் நாட்டில் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 89 ஆயிரத்து 682 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றை பொறுத்தமட்டில் மிக மோசமான நாடாக அமெரிக்கா நீடிக்கிறது. அங்கு ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மைய புள்ளி விவரத்தின் நேற்று மதிய நிலவரம், 53.61 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. அதே நேரத்தில் 1.69 லட்சம் பேர் கொரோனாவால் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் உள்ள பிரேசிலில் 33.17 லட்சம் பேருக்கு தொற்று உள்ளது. 1.07 ஆயிரம் பேர் பலியாகியும் உள்ளனர். ரஷியா, தென் ஆப்பிரிக்கா, மெக்சிகோ, பெரு, கொலம்பியா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து கொரோனாவின் ஆதிக்கத்தால் அவதியுற்று வருகின்றன.
நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் இந்தியாவில் 944 பேர் பலியாகி உள்ளனர். நேற்று முன்தினம் 996 பேர் உயிரிழந்திருந்த நிலையில், நேற்று இறப்பு சற்றே குறைந்திருக்கிறது. பலியான 944 பேரில் 322 பேர் மராட்டிய மாநிலத்தினர் ஆவர். அதற்கு அடுத்த அதிக உயிர்ப்பலியை தமிழகம் சந்தித்துள்ளது. தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகத்தில் 114 பேர் பலியாகி இருக்கிறார்கள்.
ஆந்திராவில் 87 பேர், மேற்கு வங்காளத்திலும், உத்தரபிரதேசத்திலும் தலா 58 பேர், பஞ்சாப்பில் 40 பேர், குஜராத்தில் 19 பேர், ராஜஸ்தானில் 16 பேர், மத்திய பிரதேசத்தில் 13 பேர், டெல்லி மற்றும் அரியானாவில் தலா 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒடிசாவிலும், தெலுங்கானாவிலும் தலா 9 பேரும், பீகாரில் 8 பேரும், அசாம், ஜம்மு காஷ்மீர், கேரளா ஆகியவற்றில் தலா 7 பேரும், திரிபுராவிலும், கோவாவிலும் தலா 5 பேரும், சத்தீஷ்கார், ஜார்கண்ட், உத்தரகாண்ட் மாநிலங்களில் தலா 4 பேரும், லடாக்கில் ஒருவரும் கொரோனாவுக்கு இரையாகினர்.
நாட்டில் இதுவரை பலியான 49 ஆயிரத்து 980 பேரில், மராட்டியம் (19 ஆயிரத்து 749), தமிழகம் (5,641), டெல்லி (4,188) ஆகிய மாநிலங்கள் அதிகளவிலான பலியில் அடுத்தடுத்த நிலையில் உள்ளன. பிற மாநிலங்களில், கர்நாடகத்தில் 3, 831 பேரும், குஜராத்தில் 2,765 பேரும், ஆந்திராவில் 2,562 பேரும், உத்தரபிரதேசத்தில் 2,393 பேரும், மேற்கு வங்காளத்தில் 2,377 பேரும், மத்திய பிரதேசத்தில் 1,094 பேரும் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.
ராஜஸ்தானில் 862, பஞ்சாப்பில் 771, தெலுங்கானாவில் 693, அரியானாவில் 528, ஜம்மு காஷ்மீரில் 527, பீகாரில் 450, ஒடிசாவில் 333, ஜார்கண்டில் 228, அசாமில் 182, உத்தரகாண்டில் 151, கேரளாவில் 146, சத்தீஷ்காரில் 134, புதுச்சேரியில் 106 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவாவில் 98 பேரும், திரிபுராவில் 55 பேரும், சண்டிகாரில் 28 பேரும், அந்தமான் நிகோபாரில் 24 பேரும், இமாசலபிரதேசத்தில் 19 பேரும், மணிப்பூரில் 13 பேரும், லடாக்கில் 10 பேரும், நாகலாந்தில் 8 பேரும், மேகாலயாவில் 6 பேரும், அருணாசலபிரதேசத்தில் 5 பேரும், தத்ராநகர் ஹவேலி தாமன் தியுவில் 2 பேரும், சிக்கிமில் ஒருவரும் கொரோனாவால் இறந்துள்ளனர்.
பலியானவர்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் நாள்பட்ட வியாதிகளுடன் கொரோனாவும் வந்து தாக்கி, மரணம் அடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் சொல்கிறது.
இந்தியாவில் நேற்று வரை 18.62 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, ஆஸ்பத்திரிகளில் இருந்து வெற்றிகரமாக தங்கள் வீடுகளுக்கு திரும்பி இருக்கிறார்கள்.
தற்சமயம் நாட்டில் 6.77 லட்சத்துக்கும் சற்று அதிகமானோர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகின்றனர் என மத்திய சுகாதார அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.