இ-சிகரெட் புகைப்பதும் உடல் நலத்துக்கு தீங்கானது: புகையிலை பழக்கத்தை கைவிடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள்

புகையிலை பழக்கத்தை கைவிடுங்கள் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இ-சிகரெட் புகைப்பதும் உடல் நலத்துக்கு தீங்கானது என்று அவர் கூறியுள்ளார்.
இ-சிகரெட் புகைப்பதும் உடல் நலத்துக்கு தீங்கானது: புகையிலை பழக்கத்தை கைவிடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள்
Published on

புதுடெல்லி,

பிரதமர் மோடி, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன் கி பாத் (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசி வருகிறார். அதுபோல், நேற்று அவர் அந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:-

புகையிலை பழக்கம், உடல் நலத்துக்கு தீங்கானது என்று அனைவருக்கும் தெரியும். அதற்கு அடிமை ஆகிவிட்டால், கைவிடுவது கடினம். புகையிலையை பயன்படுத்துவதால், புற்றுநோய், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் தாக்குவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

ஆகவே, புகையிலை பழக்கம் உள்ள அனைவரும் அதை கைவிட வேண்டும்.

அதே சமயத்தில், இ-சிகரெட் குறித்து தவறான நம்பிக்கைகள் பரப்பப்படுகின்றன. இ-சிகரெட் புகைப்பதால், கெடுதல் இல்லை என்று கூறுகிறார்கள். அதனால், இ-சிகரெட், எளிதாக வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இந்த விஷயத்தில் பெரும்பாலானோர் விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர்.

இ-சிகரெட்டில் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. எனவே, இ-சிகரெட்டும் உடல் நலத்துக்கு கெடுதல் விளைவிக்கக்கூடியதுதான். அந்த பழக்கத்தையும் கைவிட வேண்டும். இளைஞர்கள், புதியவகை போதை பழக்கத்துக்கு அடிமை ஆகக்கூடாது என்பதற்காகத்தான் இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த பழக்கத்தை எல்லாம் கைவிட்டு, ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க வாருங்கள் என்று அனைவரையும் அழைக்கிறேன்.

அதுபோல், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை அக்டோபர் 2-ந் தேதியில் இருந்து அனைவரும் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நவராத்திரி பண்டிகை இன்று (நேற்று) முதல் தொடங்குகிறது. பண்டிகை சூழ்நிலை என்றாலே புதிய உற்சாகமும், சக்தியும் நிரம்பி வழியும். அனைவருக்கும் நவராத்திரி பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஆண்டு தீபாவளியை பாரத் கி லட்சுமி ஆக கொண்டாடுவோம். பண்டிகை காலங்களில் பெண் சக்தியை கொண்டாட வேண்டும். பெற்ற மகள்களை வாழ்த்த வேண்டும். அனைவரையும் உள்ளடக்கியதாக பண்டிகைகளை மாற்ற வேண்டும்.

இந்தியாவின் நைட்டிங்கேல் என்று புகழப்படும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு இன்று 90-வது பிறந்தநாள். அவர் மீது மதிப்பும், மரியாதையும் இல்லாதவர்கள் மிகவும் குறைவு. அவர் எங்களில் பலரை விட மூத்தவர். அவரை தீதி என்று அழைப்போம்.

அமெரிக்கா செல்வதற்கு முன்பு அவரிடம் பேசினேன். இந்தியா கடந்து வந்த பல சகாப்தங்களை பார்த்தவர். அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com