மங்களூருவில் இருந்து துபாய்க்கு 'ஷூ'வுக்குள் மறைத்து கடத்த முயன்ற ரூ.2.60 கோடி வைரம் சிக்கியது

மங்களூருவில் இருந்து துபாய்க்கு ‘ஷூ’வுக்குள் மறைத்து கடத்த முயன்ற ரூ.2.60 கோடி வைரத்தை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி அதிரடியாக பிடித்துள்ளனர்.
மங்களூருவில் இருந்து துபாய்க்கு 'ஷூ'வுக்குள் மறைத்து கடத்த முயன்ற ரூ.2.60 கோடி வைரம் சிக்கியது
Published on

மங்களூரு:

மங்களூருவில் இருந்து துபாய்க்கு 'ஷூ'வுக்குள் மறைத்து கடத்த முயன்ற ரூ.2.60 கோடி வைரத்தை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி அதிரடியாக பிடித்துள்ளனர்.

மங்களூரு விமான நிலையம்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பேவில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து துபாய், அபுதாபி உள்ளிட்ட நகரங்களுக்கும், இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இங்கு பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், சுங்கத்துறை அதிகாரிகள், போலீசார் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளையும், மங்களூருவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளையும் கண்காணித்து வருகிறார்கள்.

வைரம் கடத்தல்

பயணிகள் சட்டவிரோதமாக கடத்தி வரும் தங்கம் மற்றும் இதர தடை செய்யப்பட்ட பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் சோதனை நடத்தி பிடித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது நூதன முறையில் 2 பயணிகள் மங்களூருவில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.2.60 கோடி மதிப்பிலான வைரத்தை அதிகாரிகள் சோதனை நடத்தி பிடித்துள்ளனர்.

அதாவது நேற்று முன்தினம் இரவில் மங்களூரு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு செல்ல ஒரு தனியார் விமானம் தயாராக இருந்தது. அதில் 2 வாலிபர்கள் பயணிக்க டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தனர்.

மாத்திரைகள் வடிவில்...

இந்த நிலையில் விமான நிலையத்திற்கு வந்த அவர்களது நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை பிடித்து விசாரித்தனர். மேலும் தனியாக அழைத்துச் சென்று கடுமையாக விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் தட்சிண கன்னடா மாவட்டம் பட்கல் பகுடியைச் சேர்ந்த அனாஸ் மற்றும் அமர் என்பதும், 2 பேரும் நூதன முறையில் ஷூவுக்குள் மாத்திரைகள் வடிவில் வைரத்தை பதுக்கி கடத்த முயன்றதும் தெரியவந்தது.

பரபரப்பு

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் விமான நிலைய போலீசாரிடம், சுங்கத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். மேலும் அவர்கள் கடத்த முயன்ற ரூ.2.60 கோடி மதிப்பிலான வைரத்தை மீட்டனர்.

மேலும் இதுபற்றி மங்களூரு விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான அனாஸ், அமர் ஆகிய 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்தால் மங்களூரு விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com