மியான்மரில் இருந்து ரூ.42 கோடி மதிப்பிலான 504 தங்க கட்டிகள் கடத்தல்; 8 பேர் கைது

மியான்மரில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட ரூ.42 கோடி மதிப்பிலான 504 தங்க கட்டிகளை வருவாய் உளவு அமைப்பு பறிமுதல் செய்துள்ளது.
மியான்மரில் இருந்து ரூ.42 கோடி மதிப்பிலான 504 தங்க கட்டிகள் கடத்தல்; 8 பேர் கைது
Published on

புதுடெல்லி,

வெளிநாட்டில் இருந்து டெல்லிக்கு தங்கம் கடத்தப்படுகிறது என டெல்லி வருவாய் உளவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கடந்த சில மாதங்களாகவே கடத்தல் நடந்து வருகிறது என கூறப்பட்ட நிலையில், டெல்லி மண்டல பிரிவு அதிகாரிகள் புதுடெல்லி ரெயில்வே நிலையத்தில் 8 பேரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

அவர்கள் திப்ரூகரில் இருந்து புதுடெல்லி வந்த ராஜ்தானி எக்ஸ்பிரசில் பயணம் செய்தவர்கள். அவர்களிடம் இருந்து வெளிநாட்டை சேர்ந்த 504 கடத்தல் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த தங்க கட்டிகள் சிறந்த முறையில் தைக்கப்பட்ட ஆடைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை அணிந்து கொண்டு பயணிகள் போல் கடத்தல் கும்பல் வந்துள்ளது.

இது தவிர்த்து போலியான ஆதார் அட்டையை பயன்படுத்தி அவர்கள் பயணம் செய்துள்ளனர். வெளிநாட்டு அடையாளங்களை கொண்ட தங்க கட்டிகள் மணிப்பூரின் மொரே நகரில் சர்வதேச நில எல்லை வழியே மியான்மர் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டிருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

இந்த தங்க கட்டிகள் அனைத்தும் 99.9 சதவீதம் தூய்மையானவை. ஏறக்குறைய 83.621 கிலோ எடையும், ரூ.42 கோடி மதிப்பும் கொண்டவை என்றும் கூறப்படுகிறது. அவர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடத்தல் பற்றி அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com